ஏத்தர் கம்பெனியிடம் இருந்து இந்த மாதிரி முடிவுகளை தான் எதிர்பார்த்தோம்! மீதி வேலையை இனி அரசாங்கமே பார்த்துடும்
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஆனது நமது தமிழ்நாட்டில் ஓசூரில் தான் உள்ளது. இந்த நிலையில், ஏத்தர் எனர்ஜியின் உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஏத்தர் எனர்ஜி போன்ற எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் உதவி மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது. அதன்படி, மத்திய தொழில்துறை அமைச்சகம் தனது தொழில்துறை மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டு பிரிவின் (DPIIT) மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு சில உதவிகளை செய்ய உள்ளது.

அதேநேரம், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் இந்திய அரசாங்கத்திற்கு தேவையான சில உதவிகளை செய்துக் கொடுக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில் ஏத்தர் எனர்ஜி மற்றும் மத்திய தொழில்துறை & உள்நாட்டு வணிக மேம்பாட்டு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலமாக, ஏத்தர் எனர்ஜியின் உற்பத்தியும், வணிகமும் அதிகரிக்க உள்ளது.
இந்திய அரசாங்கம் பெட்ரோல்/ டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த செய்து அதன் மூலம் மாசற்ற தூய்மையான போக்குவரத்தை பெற கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கும் மானியங்களை வழங்குவது எல்லாம் அந்த முயற்சியின் ஒருபகுதியே ஆகும்.

2030ஆம் ஆண்டிற்குள் சாலையில் இயங்கும் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதத்தை ஆவது எலக்ட்ரிக்கில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இத்துடன், இந்தியாவில் உற்பத்தி தொழில்களை பெருக்குவதுடன், அவற்றை அதிநவீன தரத்தில் மாற்றுவதும் மத்திய அரசின் இலக்காக உள்ளது. இதற்காகவே, 'பாரதத்தில் உருவாக்குங்கள்' என்கிற பெயரில் ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் கம்பெனிகள் உள்ளன. இதில் ஒன்றாக இணைந்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு வணிகம் தொடர்பான ஆலோசனைகளை அரசாங்கம் சார்பில் வழங்குவதோடு, நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த மத்திய அரசு உதவி செய்யும். மேலும், இந்த திட்டத்தில் உள்ள நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து புதிய கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்ளவும் அரசு வழிவகை செய்யும்.
இதுகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனரும், சிஇஓ-வுமான தருண் மெஹ்தா கூறுகையில், "வன்பொருள் மற்றும் ஆழமான தொழிற்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த DPIIT உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கொள்கை ஆதரவு மற்றும் வலுவான தொழில்துறை பங்கேற்புடன், இந்த முயற்சி ஆனது தொழில் துவங்குவோரின் முக்கிய தொழிற்நுட்ப சவால்களை சமாளிக்கவும், இந்தியாவில் இருந்து உயர்தர தயாரிப்புகளை அளவிடவும் உதவும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு கார்ப்பிரேட் நிறுவனத்திற்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது முக்கியமான ஒன்றாகும். மத்திய அரசு உடன் இணைந்து இருப்பதன் மூலம் ஏத்தர் எனர்ஜியின் உள்கட்டமைப்பு வளருவது மட்டுமின்றி, அதற்கேற்ப தயாரிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், எலக்ட்ரிக் பைக்குகள் விஷயத்திலும் ஏத்தர் நிறுவனம் இதன்பின் ஈடுப்பட துவங்கலாம்.
Source: Ather Energy/ Press Release


Click it and Unblock the Notifications








