150கிமீ தொலைவுக்கு சார்ஜ் போடனுமே என்ற பயம் இல்லாமல் ஓட்டலாம்! முன்பை விட பெரிய பேட்டரி உடன் ஏத்தர் ஸ்கூட்டர்!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நிறுவனம் குறைந்த விலையில் எல்லாரும் வாங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது கடந்த 2024ஆம் ஆண்டில்தான். 2024 ஏப்ரல் மாதத்தில் 'ஃபேமலி ஸ்கூட்டர்' என்கிற அடைமொழி உடன் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் களமிறக்கியது. அதனை தொடர்ந்து, ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கப்பட்டன. அப்போதில் இருந்து ஏத்தர் எனர்ஜியின் விற்பனையில் ரிஸ்டா முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கடந்த 2025 மே மாதத்தில் ஏத்தர் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்தது. இதனை பற்றி நமது செய்தித்தளத்தில் கூட பார்த்து இருந்தோம். இதில் ரிஸ்டாவின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். 2024 ஏப்ரலில் ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்ட பிறகே இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்த 1 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏறக்குறைய 60 ஆயிரம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரிஸ்டா ஆகும். வெறும் 10 மாதங்களில் 60 ஆயிரம் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதில் இருந்து இந்த ஸ்கூட்டருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை அறியலாம்.
இந்த எண்ணிக்கையை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் விதமாக, ரிஸ்டாவில் புதிய அப்டேட் ஒன்றை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வழங்கி உள்ளது. அது என்னவென்றால், ஏத்தர் ரிஸ்டா எஸ் ஸ்கூட்டரில் புதியதாக 3.7kWh பேட்டரி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது ஆகும். ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் (S) மற்றும் இசட் (Z) என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், விலை குறைவான எஸ் வேரியண்ட்டில் அளவில் சிறியதான 2.9kWh பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதியதாக பெரிய அளவிலான 3.7kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறைந்த விலையில் 3.7kWh பேட்டரி உடன் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 47 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் வாகனம் என்பதால், அரசாங்கத்தின் மானியத்தினால் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை சில ஆயிர ரூபாய்கள் மட்டுமே கூடுதலாக வரும். சென்னை ஆன்-ரோடு விலை ரூ.1.39 லட்சத்திற்கு சற்று அதிகமாக வரலாம்.
ஏத்தர் இசட் வேரியண்ட்டில் ஏற்கனவே பொருத்தப்பட்டுவரும் 3.7kWh பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 159கிமீ தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. இந்த ஸ்கூட்டரை ஏத்தரின் டீலர்ஷிப் ஷோரூம்களிலும், ஆன்லைனிலும் வாங்கலாம். 3.7kWh பேட்டரி உடன் ஏத்தர் எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் இந்த ஜூலை மாதத்திற்கு உள்ளாகவே துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
ரிஸ்டா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 34 லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதி (மேலும் கூடுதலாக 22 லிட்டர்கள் அதிகரித்து கொள்ளலாம்), பெரிய இருக்கை அமைப்பு மற்றும் பெரிய அளவிலான ஃப்ளோர்போர்ட் (Floorboard) உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆரம்பத்தில் '450' என்கிற செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டும் விற்பனை செய்துவந்த ஏத்தர் நிறுவனத்திற்கு ரிஸ்டாவின் அறிமுகம் ஆனது நீண்ட பயணத்திற்கான தொடக்கம் ஆகும். மற்ற விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போலவே, கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகுவதால் ரிஸ்டாவை அவ்வப்போது அப்டேட் செய்வதில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆர்வமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








