ஸ்கூட்டரை பார்த்து எடை போடாதீங்க... மணிக்கு 91கிமீ வேகத்தில் பறக்கும்! அறிமுக தேதியை சொல்லுங்கப்பா...
ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் ஆம்பியர் (Ampere) நிறுவனம் சார்பில் பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, ஆம்பியர் நெக்ஸஸ் (Nexus) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும். மார்க்கெட்டில் ஏற்கனவே ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் இந்த நெக்ஸஸ் ஸ்கூட்டரில் இரு புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டெல்லியின் துவார்கா பகுதியில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் கலந்துக் கொண்டுள்ளன. அவற்றுள் ஆம்பியர் நிறுவனமும் ஒன்றாகும். பருத்தி வணிகத்தில் ஈடுப்பட்டுவரும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தில் உள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் செயல்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்தான், ஆம்பியர் ஆகும்.

ஆம்பியர் நிறுவனத்தில் இருந்து 2025 ஆட்டோ எக்ஸ்போவில் மேக்னஸ் நியோ (Magnus Neo) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதை சமீபத்தில்தான் பார்த்திருந்தோம். இதற்காக, பெங்களூரில் இருந்து டெல்லிக்கு சுமார் 2,300கிமீ தொலைவிற்கு சாலையில் ஓட்டியப்படி மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டு செல்லப்பட்டது சாதனையாக அமைந்தது.
மேக்னஸ் நியோ உடன் சேர்த்து, நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரு புதிய வேரியண்ட்களையும் ஆம்பியர் நிறுவனம் இந்த டெல்லி மோட்டார் கண்காட்சியில் வெளியீடு செய்துள்ளது. நெக்ஸஸ் ஆனது ஆம்பியர் நிறுவனத்தின் விலைமிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதில், புதிய வேரியண்ட்கள் எக்ஸிக் (Exec) மற்றும் எஸ் டூரிஸ்மோ (S Turismo) என்கிற பெயர்களில் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் எக்ஸிக் வேரியண்ட் ஆனது லக்சரியான & ஸ்டைலான தோற்றத்தை டார்க்கெட் செய்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டார்க் ஷேடில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹேண்டில்பாரில் மட்டும் சில மரப்பலகை ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் லக்சரியான தோற்றத்திற்கு இந்த ஃபினிஷிங்குகள் முக்கியமானதாக உள்ளன.
மறுப்பக்கம், நெக்ஸஸ் எஸ் டூரிஸ்மோ வேரியண்ட் ஆனது அதிவேகமான பயணத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்த வேரியண்ட்டின் டிசைனும் ஸ்போர்டியானதாக உள்ளது. குறிப்பாக, ஹேண்டில்பாருக்கு கீழே வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற ஸ்டிக்கர் ஆனது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எங்கிருந்து பார்த்தாலும் தனியாக தெரிய வைக்கும்.

இந்த இரு வேரியண்ட்களிலும் 5 கிலோவாட்ஸ் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 3.5 மணிநேரம் தேவைப்படுமாம். நெக்ஸஸ் ஸ்கூட்டரின் இந்த இரு புதிய வேரியண்ட்களின் டாப்-ஸ்பீடு மணிக்கு 91கிமீ ஆகும். இந்த ஸ்கூட்டர்களில் 7-இன்ச் டிஎஃப்டி கன்சோல் திரை வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஆட்டோ எக்ஸ்போவில் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக ஏற்கனவே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துவிட்ட ஆம்பியர் நிறுவனம், அதன் பிரபலமான நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் புதிய வேரியண்ட்களை கொண்டுவந்திருப்பது மேலும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இருப்பினும், இந்த புதிய நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போதைக்கு வெளியீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளதே தவிர்த்து, அறிமுகம் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications









