லைசன்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இந்தியாவில் நம்பிக்கை உடன் களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்
வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம்ம ஊர் மாருதி சுஸுகியை போன்ற பிரம்மாண்டமான ஆட்டோமொபைல் நிறுவனம். கார்கள் மட்டுமின்றி வின்ஃபாஸ்ட் நிறுவனம் இரு சக்கர வாகனங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து, டெல்லியில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் மொத்தம் 6 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, வியட்நாமில் விற்பனை செய்யும் அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ள 6 வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று, எவோ 200 (Evo 200) ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2022ஆம் ஆண்டில்தான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் வியட்நாமில் அறிமுகம் செய்தது. அதன்பின், அங்குள்ள கஸ்டமர்களுக்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்து சேர 2022 அக்டோபர் வந்துவிட்டது.

வியட்நாமின் வடக்கு பகுதியில் உள்ள ஹாய் போங் நகரத்தில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் எவோ200 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துவதற்காக இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள எவோ200 எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஹாய் போங்கில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும்.
ஸ்டாண்டர்ட் மற்றும் லைட் என 2 விதமான வேரியண்ட்களில் எவோ200 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வியட்நாமில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டின் விலையும் அந்த நாட்டில் 2.2 கோடி வியட்நாம் டோங் ஆக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் ஆகும். எவோ 200 லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இதைவிட குறைவாக ரூ.66 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது.

வியட்நாம் நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இந்த விலை மிகவும் குறைவாகும். எவோ200 ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 70கிமீ ஆகும். அதுவே, எவோ200 லைட் வேரியண்ட்டின் அதிகப்பட்ச வேகம் 49kmph மட்டுமே ஆகும். ஏனெனில், எவோ200 லைட் ஆனது குறிப்பாக மாணவ, மாணவிகளுக்காக உருவாக்கப்படுகிறது. இதனை ஓட்ட வியட்நாமில் லைசன்ஸ் தேவையில்லை.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் லித்தியம் இரும்பு பாஸ்பேட் (LFP) பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 205கிமீ தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. 2022ஆம் ஆண்டு சமயத்திலேயே பேட்டரியை வாடகை முறையில் வழங்க வின்ஃபாஸ்ட் ஆரம்பித்துவிட்டது. பேட்டரி ஸ்வாப்பிங் (Battery Swapping) எனப்படும் இந்த முறை இந்தியாவில் இப்போதுதான் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

வியட்நாமில் எவோ200 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 வருட உத்தரவாதத்தை வின்ஃபாஸ்ட் வழங்குகிறது. இந்த 3 வருடத்தில் எத்தனை கிமீ தொலைவிற்கு இயங்கி இருந்தாலும், இலவச பராமரிப்பு சேவையை எவோ200 வாடிக்கையாளர்களுக்கு வின்ஃபாஸ்ட் வழங்குகிறது. வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில், வெறும் 18 மணிநேரத்தில் சுமார் 18 ஆயிரத்துக்கும் அதிகமான முன்பதிவுகள் எவோ200 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் வின்ஃபாஸ்ட் எவோ200 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்க்க அசத்தலாக உள்ளது. வியட்நாமில் விற்பனை செய்யப்படும் ரூ.75 ஆயிரம் என்கிற விலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், கண்டிப்பாக மார்க்கெட்டில் ஹிட்டு தான். அதற்கேற்ப நம் நாட்டில் பேட்டரி ஸ்வாப்பிங் முறையும் பிரபலமடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications









