இளைஞர்கள் எத்தனை பேரது தூக்கத்தை கெடுக்க போகுதோ... பஜாஜ் ஒரு முடிவோட தான் இருக்கு!!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் தனது புகழ்பெற்ற பல்சர் 220எஃப் (Pulsar 220F) பைக்கை மேம்படுத்தி, 2026ஆம் ஆண்டுக்கான அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதற்கு முன்னதாக, புதிய பல்சர் 220எஃப் பைக்குகளை ஏற்கனவே ஷோரூம்களுக்கு அனுப்பத் தொடங்கிவிட்டது. அவ்வாறு ஷோரூமுக்கு வந்த இந்த பைக்கின் படங்கள் 'ஆட்டோ டிராவல் டெக்' (Auto Travel Tech) என்கிற யூடியூப் சேனல் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.
இந்திய மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களுடன் பஜாஜ் பல்சர் 220எஃப் பலமான பிணைப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, 2021ஆம் ஆண்டில் தற்காலிகமாக விற்பனை நிறுத்தப்பட்ட இந்த பைக், வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான வரவேற்பின் விளைவாக 2023இல் மீண்டும் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. 250சிசி மற்றும் 400சிசி பல்சர் பைக்குகளின் அறிமுகத்திற்கு முன்பு வரையில், பல்சர் பிராண்டில் இதுவே அதிக என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார்சைக்கிளாக இருந்தது.

இன்றும் இதற்கு விசுவாசமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 2026 பல்சர் 220எஃப் பைக்கில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கிராபிக்ஸ், வண்ணங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. அதன்படி, பைக்கில் இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை இரண்டும் கருப்பு நிறம் அடிப்படையிலான கலர் ஆப்ஷன்கள் என்றாலும், அவற்றில் ஒன்று சிவப்பு மற்றும் சாம்பல் நிற கிராபிக்ஸ் உடன் வருகிறது.
மற்றொன்று காப்பர் மற்றும் சாம்பல் நிற கிராபிக்ஸ் உடன் வருகிறது. இந்த புதிய கிராபிக்ஸ் ஆனது பெட்ரோல் டேங்கில் இன்னும் கவர்ச்சியானதாக அமைந்துள்ளது. அனைத்து புதிய கலர் ஆப்ஷன்களிலும் கருப்பு நிறம் பொதுவானதாக இருந்தாலும், ஒரு கலர் ஆப்ஷனில் மென்மையான தங்க நிறமும் (காப்பர்), மற்றொன்றில் பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ணக் கலவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

பல்சர் 220எஃப் பைக்கின் வடிவமைப்பு, 2023இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பெரியளவில் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய எக்ஸாஸ்ட், கிளிப்-ஆன் ஹேண்டில்பார்ஸ், மஸ்குலர் ஃபேரிங், தனித்துவமான முகப்பு பகுதி, ஃபேரிங்கில் பொருத்தப்பட்ட பின்பக்கத்தை காட்டும் ரியர்-வியூ மிரர்கள் (ORVMs), இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கைகள் போன்ற அதன் அடையாளக் கூறுகள் அப்படியே தொடர்கின்றன.
செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, 2026 பஜாஜ் பல்சர் 220எஃப் இப்போது டூயல்-சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உடன் வந்துள்ளது. இது பைக்கின் பாதுகாப்பு அம்சத்தில் ஒரு முக்கிய மேம்பாடு ஆகும். முன்பு ஒற்றை-சேனல் ஏபிஎஸ் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய டூயல்-சேனல் ஏபிஎஸ், அவசரமாக பிரேக் பிடிக்கும்போது அல்லது வழுக்கும் சாலைகளில் பின்பக்க சக்கரம் பூட்டப்படுவதைத் தடுத்து, ஓட்டுபவர்களுக்கு அதிக நம்பிக்கையுடன் பிரேக் பிடிக்க உதவுகிறது.
மற்றப்படி, மற்ற அம்சங்கள் அப்படியே தொடரப்பட்டுள்ளன. 2026 பல்சர் 220எஃப் பைக் புரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஒளிரும் சுவிட்ச் கியர் மற்றும் முன்னர் இருந்த அதே முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரையை கொண்டுள்ளது. இந்த எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை ஆனது புளூடூத் இணைப்புடன், மொபைல் செயலி ஆதரவுடன் ஒவ்வொரு திருப்புதலுக்கும் செல்ல வேண்டிய வழியை காட்டுகிறது.

புதிய பல்சர் 220எஃப் பைக்கிலும் அதே 220சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.6 பிஎச்பி ஆற்றலையும், 18.55 என்.எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய பல்சர் 220எஃப் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1.28 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விலையை விட தோராயமாக ரூ.1,200 அதிகம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ், புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் மிக முக்கியமாக டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றுடன், புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் அதன் பலம் வாய்ந்த நிலையை இந்திய சந்தையில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதை பஜாஜ் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த டிசம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெறும் 2025ஆம் ஆண்டிற்கான இந்தியா பைக் வாரம் (India Bike Week) கண்காட்சியிலும் 2026 பல்சர் 220எஃப் பைக் காட்சிக்கு நிறுத்தப்படலாம்.


Click it and Unblock the Notifications









