சென்னை மக்களுக்கு குடுத்து வெச்சது அவ்வளவுதான்... பெங்களூருவில் ஸ்கூட்டரை வாங்கினால் 12,000 ரூபாய் மிச்சம்!!
உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited), பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. "முழு ஆயுள் காப்பீடு" (Fully Lifeproof) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சலுகை, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனச் சந்தைகளில் ஒன்றான பெங்களூருவுக்கு மட்டும் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் நம்பகத்தன்மை மற்றும் உறுதியான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், நகர்ப்புறப் பயணிகளுக்கும் குடும்பப் பயனர்களுக்கும் சேத்தக்கின் அம்சம் நிறைந்த வேரியண்ட்கள் அதிக அளவில் சென்றடையும் என பஜாஜ் ஆட்டோ நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்தச் சிறப்புச் சலுகை ஆனது டிசம்பர் 31 வரை பெங்களூருவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப் ஷோரூம்களிலும் கிடைக்கும். சேத்தக் வரிசையிலுள்ள எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினாலும் வாடிக்கையாளர்கள் ரூ.12,000 வரையிலான பலன்களைப் பெறலாம்.
இந்தச் சலுகைகளில் 5 ஆண்டுகள் வரை இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 24x7 இலவச சாலைப் போக்குவரத்து உதவி மற்றும் இலவச டெக்பேக் (Tecpac) ஆகியவை அடங்கும். டெக்பேக்கின் மூலம் ரைடு மோட்கள், ஒருங்கிணைந்த வரைபடங்களுடன் கூடிய நேவிகேஷன், திருட்டு/விபத்து எச்சரிக்கைகள் மற்றும் டிஜிட்டல் ஆவண சேமிப்பு போன்ற அம்சங்களை பெறலாம்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறப்பான அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கின்றன. இவை 153 கிமீ தூரம் வரை பயணம் செய்யும் அளவிற்கு ரேஞ்ச், இருக்கைக்கு அடியில் 35 லிட்டர் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் மற்றும் 3 மணி நேரத்தில் 80% சார்ஜ் ஆகும் திறனுடன் வருகின்றன. சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை ரூ.1,02,400 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
"கடினமானது, புத்திசாலித்தனமானது, இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டது" என்ற தாரக மந்திரத்துடன் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்படுவதாக பஜாஜ் தெரிவிக்கிறது. அந்த அளவிற்கு, இந்தியச் சாலைகளுக்கும், நீண்ட கால நம்பகத்தன்மைக்கும், தினசரி மன அமைதிக்கும் ஏற்ற வகையில் சேத்தக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உண்மையாகவே "Lifeproof" ஆக்கும் சில சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், அவற்றின் திடமான எஃகு உலோக உடலை சொல்லலாம். சேத்தக் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இது தனித்துவமானது ஆகும். ஐபி67 நீர் எதிர்ப்புத் திறன் ஆனது மழைக்காலத்திற்கும், அனைத்துக் காலநிலைப் பயணங்களுக்கும் ஏற்றதாக சேத்தக்கை விளங்க வைக்கிறது.
மேலும், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் நாடு முழுவதும் உள்ள 3800க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் மூலம் சேத்தக் சிறப்பான ஆதரவைப் பெற்று வருகிறது. 3001, 3503, 3502, 3501 என்கிற 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.1,39,500 வரையில் உள்ளன.

3kWh பேட்டரி உடன் உருவாக்கப்படும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 63kmph ஆகும். டிரம் பிரேக் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் உடன் உருவாக்கப்படும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடனான டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் & ஓடோமீட்டர், டி.ஆர்.எல்-கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிமீ உத்தரவாதத்தை சேத்தக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோவின் இந்த சலுகை ஆனது பெங்களூருவில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது நம் தமிழ் மக்களுக்கு சற்று வருத்தமாக இருக்கலாம். ஏனெனில், சலுகைக்காக சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூருவில் வாங்கினால் கர்நாடக மாநில நம்பர் பிளேட் தான் கிடைக்கும். அதனை பின்னர் தமிழ்நாட்டு ஆர்டிஓ-இல் மாற்றுவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும். இருப்பினும், பெங்களூருவில் உள்ளவர்கள் பஜாஜின் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









