பல்சர் பைக்குகளை கூவி கூவி விற்றாங்களே! பஜாஜ் கம்பெனிக்கு பெருசா பலன் கொடுக்கலயா?
2025 நவம்பர் மாதத்தில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் வாகன விற்பனை கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. வெளிநாட்டுச் சந்தைகளில் கிடைத்த வலுவான ஆதரவினாலும், குறிப்பாக வர்த்தக (Commercial) வாகனப் பிரிவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியினாலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு இருசக்கர வாகனங்களுக்கான தேவை ஒருவித தேக்க நிலையைக் காட்டிய போதிலும், அதிகரித்து வரும் ஏற்றுமதி அளவுகளும், குறிப்பிட்ட பிரிவுகளில் ஏற்பட்ட சீரான வளர்ச்சியும் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் விற்பனையை சாதகமான நிலையில் தக்க வைத்துள்ளன. பஜாஜ் ஆட்டோவின் கடந்த நவம்பர் மாதத்தின் மொத்த ஒருங்கிணைந்த விற்பனை 4,53,273 யூனிட்டுகளாகப் பதிவாகி உள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே நவம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ பதிவு செய்த 4,21,640 யூனிட்டுகள் உடன் ஒப்பிடும்போது எட்டு சதவிகித முன்னேற்றத்தை காட்டுகிறது. ஆனால், பஜாஜின் இருசக்கர வாகனப் பிரிவின் உள்நாட்டு விற்பனை சற்று வேறுபட்ட போக்கைக் காண்பிக்கிறது. இது ஒரு சதவிகிதம் குறைந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் 2,03,611 யூனிட்களில் இருந்து 2,02,510 யூனிட்டுகளாகச் சரிந்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் இந்தச் சிறிய உள்நாட்டு விற்பனைச் சரிவை, வலுவான ஏற்றுமதி ஈடுசெய்துள்ளது. சர்வதேசச் சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் எட்டு சதவிகிதம் அதிகரித்து, 1,64,465 யூனிட்டுகளில் இருந்து 1,77,204 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, பஜாஜின் கடந்த நவம்பர் மாத மொத்த இருசக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 3,79,714 யூனிட்டுகளாக நிறைவடைந்துள்ளது.
இது கடந்த ஆண்டு நவம்பரை விட மூன்று சதவிகித வளர்ச்சியாகும். அதேபோல் மறுப்புறம், பஜாஜ் நிறுவனத்தின் கமர்ஷியல் வாகனப் பிரிவு நவம்பர் மாதத்தில் மிகுந்த நம்பிக்கைக்குரிய விற்பனையை கடைப்பிடித்துள்ளது. உள்நாட்டில் பஜாஜ் கமர்ஷியல் வாகன விற்பனை கடந்த மாதத்தில் மிக வேகமாக உயர்ந்து 45,006 யூனிட்டுகளை எட்டியுள்ளது.

இது கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்கின்படி 37,243 யூனிட்டுகளில் இருந்து 21 சதவிகித உயர்வை வெளிக்காட்டுகிறது. மேலும், கடந்த மாதத்தில் பஜாஜின் கமர்ஷியல் வாகனங்கள் ஏற்றுமதி புள்ளி விவரங்கள் இதைவிடவும் மகத்தானதாக இருந்தன. அதாவது, 2024 நவம்பரில் 16,321 பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2025 நவம்பரில் 28,553 யூனிட்டுகளாக சுமார் 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதன் பலனாக, பஜாஜ் ஆட்டோவின் கடந்த மாதத்தின் ஒட்டுமொத்த கமர்ஷியல் வாகன விற்பனை எண்ணிக்கை 73,559 யூனிட்டுகளாகப் பதிவாகி உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 53,564 யூனிட்டுகளை காட்டிலும் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஆகும். இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் என இரண்டிலும் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனையை மட்டும் மதிப்பீடு செய்யும்போது, பஜாஜ் 2,47,516 யூனிட்டுகளைப் பதிவுசெய்துள்ளது.
இது கடந்த ஆண்டு நவம்பரை விட மூன்று சதவிகித வெற்றிகரமான வளர்ச்சி ஆகும். கடந்த நவம்பர் மாதத்தின் பஜாஜின் ஒட்டுமொத்த ஏற்றுமதி எண்ணிக்கை 2,05,757 யூனிட்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டை விட 14 சதவிகிதம் அதிகமாகும். ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் புள்ளிவிவரங்களின்படி, பஜாஜ் ஆட்டோ அனைத்து வகையான வாகனங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 33,76,800 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 32,24,907 யூனிட்டுகளை விட ஐந்து சதவிகித உயர்வாகும். உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை ஐந்து சதவிகிதம் குறைந்து 15,94,900 யூனிட்டுகளாகப் பதிவாகி உள்ளது. ஆனால், இருசக்கர வாகன ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் 14 சதவிகிதம் அதிகரித்து 12,44,908 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோவின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் வலுப்படுத்துவதில் கமர்ஷியல் வாகன வணிகம் மீண்டும் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. இருப்பினும், 2-வீலர்களின் விற்பனை சற்று குறைந்திருப்பது நிச்சயமாக பஜாஜ் நிறுவனத்திற்கு கவலையளிக்க கூடியதாகவே இருக்கும். அதேபோல், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனையிலும் பஜாஜ் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) முந்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








