2025ம் ஆண்டின் முதல் சோகமான செய்தி.. இந்த பைக்கிற்கா இப்படி ஒரு நிலைமை! சத்தமே இல்லாம பிரியா விடை கொடுத்தாச்சு
2025 ஆம் ஆண்டை அனைவரும் சந்தோஷமாக வரவேற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மிகுந்த சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கின்றது. பஜாஜ் (Bajaj) நிறுவனம் சத்தமே இல்லாமல் அதன் குறிப்பிட்ட பல்சர் பைக் மாடல் ஒன்றை விற்பனையில் இருந்து அகற்றி இருப்பதுதான் அது ஆகும். பல்சர் வரிசையில் நிறைய மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதில் ஒன்றே பல்சர் எஃப்250 (Pulsar F250) ஆகும். இதுவே தற்போது விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. இந்த ஆண்டின் முதல் வெளியேற்றம் இதுவாகும்.
2025 ஆம் ஆண்டு முழுமையாக மூன்று நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக வாகன அகற்றம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இரண்டு சக்கர வாகன காதலர்களின் மனதை இந்த நிகழ்வு மிகப் பெரிய அளவில் பாத்திருக்கின்றது.

விற்பனை வீழ்ச்சியே இந்த பல்சர் எஃப்250 பைக் மாடல் வெளியேற்றத்திற்கான காரணம் என கூறப்படுகின்றது. நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இந்த பைக்கிற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்தே இந்த பைக் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. பைக்கின் அகற்றத்தை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து பல்சர் எஃப்250 மாடல் பற்றிய அனைத்து விபரங்களும் அகற்றப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் இந்த பைக் மாடல் 2021 ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கின்றது. என்250 மாடலுடனேயே இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் என்250-க்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு எஃப்250-க்கு கிடைக்கவில்லை. இதன் விளைவாகவே தற்போது இந்த பைக் மாடல் அகற்றப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பலகட்ட முயற்சிகளைர பஜாஜ் மேற்கொண்டது. அந்தவகையில், கடந்த ஆண்டின் மே மாதத்தில் பல்சர் எஃப்250 மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. மாடர்ன் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றை தாங்கிய பைக் மாடலாகவே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
விலையும் அதற்கு ரூ. 1.50 லட்சம் என்கிற குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், இந்தியர்கள் இந்த பைக்கிற்கு வரவேற்பை வழங்கவில்லை. எனவேதான் தற்போது சோகமான முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. மீண்டும் இந்த 250சிசி திறன் கொண்ட பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை.
249 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.1 எச்பி பவரையும், 21.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. முக்கிய அம்சங்களாக இந்த பைக்கில் டிஸ்க் பிரேக், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் அகலமான 140 செக்சன் வகை டயர் ஆகியவையே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து, ப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, டெலிஸ்கோபிக் ஃபோர்க் போன்ற அம்சங்களையும் பல்சர் எஃப்250 பைக்கில் பஜாஜ் வழங்கி இருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய பைக் மாடலே துரதிர்ஷ்டவசமாக இப்போது சந்தையில் இருந்து வெளியேறியிருக்கின்றது. அதேவேளையில், பஜாஜ் நிறுவனம் பல்சர் வரிசையில் விரைவில் ஓர் புதுமுக மாடலை இணைக்க இருக்கின்றது.
அது 400 சிசி பிரிவிலேயே விற்பனைக்குக் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இந்த பைக் மாடல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் டீசர் வீடியோ மட்டுமே வெளியிடப்பட்டது. அதிலும் பைக் பற்றிய விபரங்கள் பெரிய அளவில் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே இந்திய இரண்டு சக்கர வாகன பிரியர்களின் கவனம் தற்போது அதன் பக்கமும் திரும்பியிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250, யமஹா ஆர்15 வி4 மற்றும் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்டதே பல்சர் எஃப்250 ஆகும். இதன் வெளியேற்றத்தால் அதன் போட்டியாளர்களுக்கு தற்போது போட்டி குறைந்திருக்கின்றது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








