100 கிமீ மைலேஜ் தரும் பைக்கின் விலையை ஒரே அடியா கொறச்சுட்டாங்க! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விடு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி (Bajaj Freedom 125 CNG). உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் ஆகும்.
அதிகபட்சமாக 9.50 பிஎஸ் பவர் மற்றும் 9.70 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 எரிபொருட்கள் மூலமாகவும் இயங்க கூடியது. இதில், பெட்ரோல் மூலமாக இயங்கும்போது லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 100 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான மைலேஜ் என்றாலும் கூட, பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 1,394 பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதன் பின் வந்த ஏப்ரல் மாதமே இந்த எண்ணிக்கை மேலும் சுருங்கி, வெறும் 993 ஆக மாறியது. பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விற்பனை மந்தமாக இருப்பதற்கு 2 காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஒன்று, சிஎன்ஜி பைக்கை பற்றிய விழிப்புணர்வு வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவில் இல்லை.

மற்றொன்று, சிஎன்ஜி கிடைப்பதில் இருக்கும் பிரச்னைகள் ஆகும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் அளவிற்கு, எளிமையான முறையில் சிஎன்ஜி கிடைப்பதில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்க்குகளில் மட்டுமே சிஎன்ஜி கிடைக்கிறது. இது போன்ற காரணங்களால் தடுமாறி கொண்டுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் விரும்புகிறது.
இதன் ஒரு பகுதியாக ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலையை பஜாஜ் நிறுவனம் தற்போது அதிரடியாக குறைத்துள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை என்ஜி04 ட்ரம், என்ஜி04 ட்ரம் எல்இடி மற்றும் என்ஜி04 டிஸ்க் எல்இடி ஆகியவை ஆகும்.
இதில், என்ஜி04 ட்ரம் எல்இடி மற்றும் என்ஜி04 டிஸ்க் எல்இடி ஆகிய 2 வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை தொடர்ந்து முறையே 96 ஆயிரம் ரூபாய் மற்றும் 1.11 லட்ச ரூபாய் என்ற விலைகளிலேயே விற்பனை செய்யப்படும். ஆனால் என்ஜி04 ட்ரம் வேரியண்ட்டின் விலை மட்டும் அதிரடியாக 5 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே என்ஜி04 ட்ரம் வேரியண்ட் இனி 86 ஆயிரம் ரூபாய் என்ற விலையிலேயே கிடைக்கும். இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த அதிரடி விலை குறைப்பால், பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து, டிவிஎஸ் (TVS) நிறுவனம், கூடிய விரைவில் புத்தம் புதிய சிஎன்ஜி பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய சந்தையில் சிஎன்ஜி டூவீலர்களின் யுகம் தொடங்கி விட்டது என்பதையே இது குறிக்கிறது.


Click it and Unblock the Notifications








