அடுத்த மாசம் ஒரு இவி கூட தயாரிக்க முடியாது! பஜாஜ்க்கு இப்படி ஒரு நிலைமையா?
எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முக்கிய மூலப்பொருளான ரேர் எர்த் எலமென்ட் என்ற மூலப்பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்துள்ள நிலையில், தற்போது பஜாஜ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை கூட தயாரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டூவீலரில் ஸ்கூட்டர் செக்மெண்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எலெக்ட்ரிக் மோட்டார் மிக முக்கியமான கருவியாக இருக்கிறது. இது காந்த சக்தியில் இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்த காந்தத்தை தயாரிக்க ரேர் எர்த் எலமென்ட் என்ற மூலப்பொருள் தேவை.
இந்நிலையில் சீனாவிலிருந்து வெளிநாட்டிற்கு ரேர் எர்த் எலெமென்டை ஏற்றமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது. இதன் காரணமாக மற்ற நாடுகளில் உள்ள எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பீதியடைந்துள்ளனர். பலர் மாற்று வழியை தேட துவங்கி மற்ற நாடுகளில் இந்த மூலப்பொருள் எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதை பார்த்து அதை வாங்க துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் சமீபத்தில் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் "பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 வீலர் ஆகிய செக்மெண்ட்களில் சிறப்பான வளர்ச்சியை பெற்று உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இதனால் விற்பனை அதிகமாகும், தயாரிப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் மூலப்பொருளான ஹெவி ரேர் எர்த் மேக்னட் கிடைப்பது கடினமாகிவிட்டது. தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மேக்னட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுடன் கூட்டு வைத்துள்ளோம். ஆனால் அவர்களால் தேவையான அளவு மேக்னட்களை தயாரிக்க முடியவில்லை.
எங்களிடம் ஏற்கனவே இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் கடந்த ஜூன்மாதத்துடனேயே தீர்ந்து விட்டன. இந்நிலையில் இந்த ஜூலை மாதம் நாங்கள் தயாரிப்பை பாதியாக குறைத்துவிட்டோம். வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை கூட தயாரிக்க முடியாத சூழ்நிலை தான் ஏற்படும் என நினைக்கிறோம். இது நடந்துவிட்டால் நாங்கள் எங்கள் மார்மெட் பங்கையும், வருவாயையும் பெரும் அளவில் இழப்போம்.

சீனாவைவிட்டு மற்ற நாடுகளிடம் நாங்கள் இந்த தயாரிப்பை பெற முயற்சிக்கலாம். ஆனால் நாங்கள் தரம் மற்றும் விலையையும் பார்க்க வேண்டியது உள்ளது. இதற்கான மாற்றும வழிகளை பற்றி யோசித்து வருகிறோம்" என்று கூறினார். பஜாஜ் நிறுவனம் சேத்தக் மற்றும் கோகோ என்றபிராண்டில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களையும் தயாரித்து வருகிறது. இந்த தயாரிப்பு தற்போது தடைபட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனா தற்போது ரேர் எர்த் எலெமென்ட் ஏற்றுமதியை தடை செய்துள்ளதால் தற்போது உலகம் முழுவதும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் திண்டாடி வருகின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மாற்று வழியை யோசித்துவிட்ட நிலையில் தற்போது பஜாஜ் நிறுவனம் அதற்கான பணியில் தீவிரமாக உள்ளது. விரைவில் இந்த பிரச்சனையை அந்நிறுவனம் சரி செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









