ரூ. 70,000க்கு புதுசா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்னு அறிமுகமாகி இருக்கு.. 2 kWh அமரான் பேட்டரில பட்டைய கிளப்புது!
முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பேட்-ஆர்இ எலெக்ட்ரிக் மொபிலிட்டி (BattRE Electric Mobility), இந்தியாவில் புதுமுக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. லோ-இவி பிளஸ் (LOEV+) எனும் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதை உச்சரிக்கும்போது லோவ் பிளஸ் என சொல்லலாம். இதற்கு அறிமுகமாக ரூ. 69,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
விலை குறைவானதாக இருந்தாலும் இதில் பன்முக சிறப்பம்சங்களை பேட்ஆர்இ நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ரைடருக்கு உதவி செய்யக் கூடிய அட்வான்ஸ்டு அம்சங்கள் சில லோ-இவி பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் (Cruise Control) மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist) ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து மேம்பட்ட ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த ஸ்கூட்டரில் சிஏஎன்-ஆல் இயங்கும் தகவல் தொடர்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பம்சங்களில் மட்டுமல்ல வெளிப்புறத் தோற்றத்திலும் இது அட்டகாசமானதாகக் காட்சியளிக்கின்றது. 12 அங்குல அலாய் வீில், எல்இடி லைட்டுகள் உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டருக்கு அதிக அழகைச் சேர்க்கும் விதமாக உள்ளன.
அத்துடன், இதன் வண்ண ஆப்ஷன்களும் அதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. ஸ்டார் லைட் ப்ளூ (Starlight Blue), ஸ்டார்மி கிரே (Stormy Grey), ஐஸ் ப்ளூ (Ice Blue), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் பேர்ல் ஒயிட் (Pearl White) ஆகிய வண்ண ஆப்ஷன்களிலேயே லோ-இவி பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.
இது ஓர் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் காட்சியளிக்கின்றது. மணிக்கு 60 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் அது இயங்கும். மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகியவையே அவை ஆகும்.
இதில் ஈகோ மோடில் அதிகபட்சமாக மணிக்கு 30 கிமீ வேகத்திலும், கம்ஃபோர்ட் மோடில் மணிக்கு 48 கிமீ வேகத்திலும், ஸ்போர்ட்ஸ் மோடில் உச்சபட்ச வேகமான மணிக்கு 60 கிமீ வேகத்தில் அது இயங்கும். இதேபோல், இதில் ஓர் முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
ஈகோ மோடிலேயே இந்த அதிகபட்ச ரேஞ்சை பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அதிகபட்ச ரேஞ்ச் திறனுக்காக ஸ்கூட்டரில் 2 kWh திறன் கொண்ட அமரான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக் ஆகும்.
ஆகையால் தண்ணீர் மற்றும் தூசியால் இந்த வாகனத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என தெரிகின்றது. 21,700 செல்கள் பயன்படுத்தப்பட்ட ஓர் பேட்டரி பேக்கே இதுவாகும். இதை வேகமாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். 2 மணி நேரம் 50 நிமிடங்களே இதை முழுமையாக சார்ஜ் செய்ய போதுமானதாக உள்ளது.
இதேபோல், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகள் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், பின்னால் அமரும் பெண் பயணிகளின் புடவை சக்கரத்தில் மாட்டக் கூடாது என்பதற்காக புடவை குவார்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எண்ணிக்கை புதிய லோ-இவி பிளஸ் மாடலின் வருகையால் சற்றே உயர்ந்திருக்கின்றது. இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








