டிவிஎஸ் ஆலையில் உருவாகும் BMW பைக்குகள்னு கெத்தா சொல்லிட்டு இருந்தோம்... ஒசூர் ஃபேக்ட்ரியின் வேலை முடிந்தது!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனமும், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனமும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த கூட்டணியில் சில 310சிசி பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனங்கள் இணைந்து 310சிசி பைக்குகளை உருவாக்கி உள்ளன. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் (G310 R) மற்றும் ஜி310 ஜிஎஸ் (G310 GS) பைக்குகள் உள்ளிட்டவை இந்த கூட்டணியில் உருவாக்கப்பட்டவை ஆகும். சமீபத்தில் கூட, பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்.ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.
இதே பாணியை பின்தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் அப்பாச்சி ஆர்டிஆர்310 (Apache RTR310) மற்றும் அப்பாச்சி ஆர்.ஆர்310 (Apache RR310) பைக்குகளை உருவாக்கி அறிமுகம் செய்தது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்.ஆர் பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 ஆகும்.

இவ்வாறு பைக்கிற்கான என்ஜினில் இருந்து சஸ்பென்ஷன், பிரேக் என அனைத்தையும் ஒன்றாக இணைந்து உருவாக்குவதன் மூலம் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் என இரு நிறுவனங்களுக்கும் பல விதங்களில் நன்மைகள் வந்து சேர்க்கின்றன. இந்த நிலையில், பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகளின் பெயர்கள் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளின் விற்பனை படிபடியாக இந்தியாவில் நிறுத்தப்பட உள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆனது பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் விலை குறைவான மோட்டார்சைக்கிள்கள் ஆகும். அதற்காக மிகவும் குறைவான விலையை எதிர்பார்த்திட வேண்டாம்.
தற்போது விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்பு வரையில், ஜி310 ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.90 லட்சத்தில் இருந்தும், ஜி310 ஜிஎஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.30 லட்சத்தில் இருந்தும் துவங்குவதாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகளை டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்புவதை கடந்த ஜனவரி மாதத்திலேயே பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் நிறுத்திவிட்டதாம். அதனை தொடர்ந்து, தற்போது இந்த விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்குகளின் பெயர்கள் பிஎம்டபிள்யூ வெப்சைட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் ஒபிடி-2பி (OBD 2B) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த பைக்குகளை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அப்கிரேட் செய்ய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஜி310 ஜிஎஸ் என்கிற அட்வென்ச்சர் ரக பைக்கிற்கு பதிலாக, எஃப்450 ஜிஎஸ் (F450 GS) என்கிற அட்வென்ச்சர் பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
எஃப்450 ஜிஎஸ் ஆனது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ட்வின்-சிலிண்டர் என்ஜினை கொண்ட பைக் ஆகும். அதிகப்பட்சமாக 47 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் புதிய எஃப்450 ஜிஎஸ் பைக் இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் விலை குறைவான 310சிசி பைக்குகளின் விற்பனையை நிறுத்தினாலும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து அதன் 310சிசி பைக்குகளை விற்பனை செய்ய உள்ளது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தில் ஓரளவிற்கு அதிகம் விற்பனையாகும் பைக்குகளாக இவை விளங்கின. இருப்பினும், இவற்றின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








