புது BMW பைக்கை பார்த்ததுமே புக் பண்ண கை துடிக்குது... விலையை பார்த்ததுமே ஆஃப் ஆயிடுது!
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா (BMW Motorrad India) நிறுவனம், புதிய எஸ் 1000 ஆர் (S1000 R) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ரோட்ஸ்டர் ரக பைக், முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு (CBU) விற்பனை செய்யப்பட உள்ளது. இன்று முதல், அனைத்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா டீலர்ஷிப்களிலும் இதை முன்பதிவு (Booking) செய்யலாம்.
பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்தீப் சிங் பிரார் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர், ஒரு சூப்பர்பைக்கின் சக்தியுடன் ஒரு ரோட்ஸ்டரின் கவர்ச்சியான வடிவமைப்பைச் சேர்ப்பதாக அவர் கூறினார். இது மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான மற்றும் தூய செயல்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"இந்த பைக் பார்ப்பதற்கு எவ்வளவு பரவசமூட்டுகிறதோ, அதே அளவுக்கு ஓட்டுவதற்கும் உற்சாகமானது. அதன் கம்பீரமான தோற்றம், துல்லியமான வடிவமைப்பு மற்றும் அட்ரினலின் நிரம்பிய டிஎன்ஏ ஆகியவை வேக விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண இருசக்கர வாகனம் அல்ல; ஒரு தனித்துவமான அடையாளம்" என்றும் ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்தார்.
புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.19,90,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக் பிளாக் ஸ்டார்ம் மெட்டாலிக், ப்ளூ ஃபயர்/ முஜியல்லோ மஞ்சள் (ஸ்டைல் ஸ்போர்ட் உடன் மட்டும்) மற்றும் லைட் ஒயிட் யூனி/எம் மோட்டார்ஸ்போர்ட் (எம் பேக்கேஜ் உடன் மட்டும்) ஆகிய மூன்று கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் பைக்கின் தனித்துவமான ரோட்ஸ்டர் வடிவமைப்பு, பைக்கிற்கு பிரத்தியேகமான தோற்றத்தை வழங்குகிறது. பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் மற்றும் 'R' லோகோவுடன் கூடிய ஸ்ப்ளிட்ஃபேஸ் எல்இடி ஹெட்லைட், ஒரு கம்பீரமான தோற்றத்தை பைக்கிற்கு வழங்குகிறது.
குறுகிய மற்றும் ஸ்போர்ட்டியான நம்பர் பிளேட் ஹோல்டர், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் பின் நம்பர் பிளேட் விளக்குகள் ஆகியவை இப்போது ஒரே தொகுப்பாக உள்ளன. பிரேக் மற்றும் டெயில் லைட்டின் செயல்பாடு, டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ரேசிங் பைக்குகளுக்கே உண்டான இந்த பைக்கின் பண்பானது கலர்ஃபுல்லான பெயிண்ட் ஆப்ஷன்கள் மூலம் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது.
பிளாக் ஸ்டார்ம் மெட்டாலிக் என்ற அடிப்படை வண்ணத்துடன், இந்த பைக் ஸ்டைல் ஸ்போர்ட் மற்றும் எம் பேக்கேஜ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ப்ளூ ஃபயர்/ முஜியல்லோ மஞ்சள் கலர் ஆப்ஷனில் ஸ்டைலான டிண்டட் ஸ்போர்ட் விண்ட்ஸ்கிரீன் உடன் ஒரு மாறுப்பட்ட தோற்றத்தை பைக் அளிக்கிறது.

பிரத்தியேகமான எம் மோட்டார்ஸ்போர்ட் பெயிண்ட் ஃபினிஷ் ஆனது எம் பேக்கேஜ் உடன் லைட் ஒயிட் யூனி, லைட் ப்ளூ, டார்க் ப்ளூ மற்றும் ரெட் ஆகிய வண்ணக் கலவைகளில் கிடைக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர், 999சிசி திறன் கொண்ட ஆயில்/வாட்டர்-கூல்டு நான்கு சிலிண்டர் நான்கு ஸ்ட்ரோக் இன்-லைன் என்ஜினைக் கொண்டுள்ளது.
இது அதிகப்பட்சமாக 11000 ஆர்பிஎம்-ல் 170 எச்பி (125 kW) வரையிலான இயக்க ஆற்றலையும், 9250 ஆர்பிஎம்-ல் அதிகபட்ச 114 என்.எம் டார்க்கையும் உருவாக்குகிறது. புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர், 0-100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டி, அதிகபட்சமாக 250 கிமீ/மணி வேகத்தில் (மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்டது) செல்லக்கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 1000சிசி பைக்குகளுக்கும் ஏகப்பட்ட கஸ்டமர்கள் உள்ளனர். ஏனெனில், அந்த அளவிற்கு பல்வேறு தரப்பிலான வாடிககையாளர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதனாலேயே, பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் போன்ற நிறுவனங்கள் தைரியமாக இவ்வாறான விலையுயர்ந்த 1000சிசி பைக்குகளை இந்தியாவில் களமிறக்குகின்றன.


Click it and Unblock the Notifications









