ஷோரூமுக்கு போய் பைக் வாங்குறது எல்லாம் அந்த காலம்! மொபைல் போனில் அமேசான் ஆப் இருந்தால் போதும்!
ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa-Yezdi Motorcycles) நிறுவனம், இந்தியாவில் செயல்படும் அமேசான் (Amazon) ஆன்லைன் (Online) தளத்தில் தங்கள் முழு பைக்குகள் வரிசையை பட்டியலிட்டு, டிஜிட்டல் விற்பனையை விரிவுப்படுத்தி உள்ளது. தற்போது 40 நகரங்களுக்கும் மேல் இந்த சேவை கிடைக்கிறது. மேலும் பண்டிகைக் காலத்தில் 100 நகரங்களுக்கு மேல் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 அக்டோபரில் பிளிப்கார்ட்டில் (Flipkart) ஆன்லைன் விற்பனையை ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் துவங்கியதை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான அமேசானிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜாவா 350, ஜாவா 42, ஜாவா 42 எஃப்.ஜே, ஜாவா 42 பாப்பர், ஜாவா பெராக், யெஸ்டி அட்வென்ச்சர் மற்றும் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் போன்ற ஜாவா, யெஸ்டி பைக்குகள் இப்போது அமேசானிலும் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான ஜாவா, யெஸ்டி பைக்குகளின் முழு விவரக்குறிப்புகளையும், மாறுபாடுகளையும் ஆன்லைனில் பார்த்து, முன்பதிவை முழுமையாக டிஜிட்டல் (Digital) முறையில் மேற்கொள்ளலாம். ஜாவா-யெஸ்டி நிறுவனம் இந்தியா முழுவதும் 450-க்கும் மேற்பட்ட டீலர் தளங்களையும் கொண்டுள்ளது. அவற்றின் வாயிலாகவும் இந்த ஆன்லைன் முன்முயற்சியை மேற்கொள்ளலாம்.
ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளை விற்பனை செய்யும் கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ஷரத் அகர்வால் இதுகுறித்து கூறுகையில், "ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் வணிகத்தில் நுழைந்தோம். இளம் நுகர்வோர் விடுமுறைப் பயணங்களை முன்பதிவு (Booking) செய்வதற்கோ அல்லது ஆன்லைனில் கார் வாங்குவதற்கோ தயங்காதபோது, ஜாவா அல்லது யெஸ்டி பைக்கையும் அதேபோல் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்ற எளிய நம்பிக்கையுடன் இதைச் செய்கிறோம்."

"பிளிப்கார்ட் உடன் தொடங்கி இப்போது அமேசானுக்கு விரிவடைந்துள்ளோம். இதன் மூலம் ஜாவா, யெஸ்டி பைக் உரிமையாளர் ஆகுவதை எளிதாகவும் வெளிப்படையாகவும் ஆக்குகிறோம். அதேசமயம் ஆன்லைன் தளங்களிலும் மோட்டார்சைக்கிளின் திறன் அப்படியே இருக்கும்" என்று அவர் கூறினார். ஷரத் அகர்வால் கூறுவதை போல, ஆன்லைனில் பைக் வாங்குதல் மிகவும் எளிமையானது.
வாங்குபவர்கள் அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price)-ஐச் செலுத்திய பிறகு, மீதி ஆன்-ரோடு தொகையை அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் செலுத்த வேண்டும். டீலர்கள் பதிவு, காப்பீடு மற்றும் வாகனத்தை டெலிவிரி (Delivery) செய்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்வார்கள். தனிப்பயனாக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் ஷோரூம் வாயிலாக கூடுதல் ஆக்சஸரீஸ்களையும் (Accessories) பெறலாம்.

ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது பைக்குகளுக்கு நான்கு வருடங்கள் அல்லது 50,000 கி.மீ. ஸ்டாண்டர்ட் வாரண்டி மற்றும் ஒரு வருட இலவச சாலையோர உதவி ஆகியவற்றை வழங்குகிறது. 4 வருட உத்தரவாதத்தை தேவைப்பட்டால், கூடுதல் கட்டணத்தை செலுத்தி ஆறு வருடங்களாக அதிகரித்துக் கொள்ளலாம். அதேபோல், சாலையோர உதவியையும் எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.
ஐந்து வருட விரிவான ஏ.எம்.சி பேக்கேஜ் மூலம் சர்வீஸ் செலவுகள் நிலையானதாக இருக்கும். மறுப்பக்கம் அமேசான் நிறுவனம் தனது பங்கிற்கு எளிதான மாதத்தவணை விருப்பங்களையும், அமேசான் பே ஐசிஐசிஐ கோ-பிராண்டட் கார்டுகளைப் பயன்படுத்தும் பிரைம் உறுப்பினர்களுக்கு 5% பணம் தள்ளுபடியையும் வழங்குகிறது.

பிளிப்கார்ட் 24 மாதங்கள் வட்டி இல்லாத மாதத்தவணை வசதி மற்றும் ரூ.4,000 வரையிலான 5% பணம் தள்ளுபடி ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக நிதி மற்றும் காப்பீட்டு தொகுப்புகளுடன் வழங்குகிறது. தற்சமயம், 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட ஜாவா-யெஸ்டி டீலர்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் உள்ளனர். வரும் வாரங்களில் மேலும் பல டீலர்ஷிப்கள் இதில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமேசானுக்கு விரிவடைந்தது, பிளிப்கார்ட்டில் ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் அணுகுமுறை, இ-காமர்ஸ் (e-Commerce) மூலம் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கான வளர்ந்து வரும் தேவையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் இந்தத் துறைக்கு புதிய டிரெண்ட்டை உருவாக்குகிறது. இவற்றுடன், பண்டிகைக் கால சலுகைகள் ஜாவா, யெஸ்டி பைக் வாங்குபவர்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்கின்றன.


Click it and Unblock the Notifications









