லோடு டிரைசைக்கிளுக்கு தீர்வாக வந்தாச்சு எலெக்ட்ரிக் 3சக்கர வாகனம்.. டிவிஎஸ் எக்ஸ்எலை விட அதிக சரக்கை ஏற்றலாமா!
சிறிய வியாபாரிகள் தங்களின் சரக்குகளை ஏற்றிச் செல்ல இரண்டு சக்கர வாகனங்களையே லோடு வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர். வாகனத்தின் உயரத்தைவிட பல மடங்கு அதிக உயரத்தில் சரக்குகளை வியாபாரிகள் ஏற்றிச் செல்வதை நாம் தினமும் பார்த்து வருகின்றனர். குறிப்பாக, டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL)-லையே வியாபாரிகள் தங்களின் அதிகம் லோடு வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். லோடு ஏற்றிச் செல்வதற்காகவே தயார் செய்யப்பட்ட ஓர் டூ-வீலரே டிவிஎஸ் எக்ஸ்எல் ஆகும். இதனால்தான் அதற்கு தனித்துவமான வரவேற்பு சிறிய வியாபாரிகள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதேபோல், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக சில சிறிய வியாபாரிகள் லோடு டிரைசைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஓரளவு அதிக லோடை ஏற்றிக் கொள்ள முடியும். இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் எக்ஸ்எல் மற்றும் லோடு டிரைசைக்கிள்களுக்கு மாற்று வாகனத்தை ஸ்பீட்-லூப் ஆட்டோ (Speedloop Auto) விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

கிராக் இவி (Croc EV) எனும் வாகனத்தையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. லோடு டிரைசைக்கிளை போலவே இதன் தோற்றமும் உள்ளது. மொத்தம் மூன்று வீல்களைக் கொண்ட இந்த வாகனத்தின் முன் பக்கத்தில் இரண்டு வீல்களும், பின் பக்கத்தில் ஒற்றை வீலும் வழங்கப்பட்டு உள்ளது.
இது மின்சார லோடு வாகனம் ஆகும். இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. ஒரு தேர்வில் 2 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும், மற்றொரு தேர்வில் 4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இரண்டும் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும்.
சிறிய பேட்டரி பேக் கொண்ட தேர்விற்கு ரூ. 1.75 லட்சமும், பெரிய பேட்டரி பேக்கைக் கொண்ட வேரியண்டிற்கு ரூ. 2 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து இந்த வாகனத்திற்கான ப்ரீ-புக்கிங் பணிகளையும் ஸ்பீட்-லூப் ஆட்டோ நிறுவனம் தொடங்கி இருக்கின்றது.
ரூ. 2025 முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய அளவில் இந்த வாகனத்தை இந்தியாவில் விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே குறைவான விலை அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய இலக்காக பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.
கிராக் இவி-யில் அதிகபட்சமாக 100 கிலோ வரையிலான எடைக் கொண்டு பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். லிட்டர் அளவில் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 350 லிட்டர் பொருட்களை ஏற்றிக் கொள்ள முடியும். இதை வழக்கமான லோடு வாகனமாக தயாரிக்காமல் அதிக அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய வாகனமாக தயாரித்து இருக்கின்றனர்.
உதாரணமாக, இதன் முன் பக்கத்தில் மினி கார்களில் வழங்கப்படுவதைப் போல இரண்டு ஹெட்லைட் அமைப்பு மற்றும் திருப்பத்தை இன்டிகேட் செய்யும் லைட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, போலி விண்ட்ஷீல்டு அமைப்பும் இந்த வாகனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் குறைந்த வேகத்தில் பயணிக்கும் மின்சார வாகனம் ஆகும்.
இதன் டாப் ஸ்பீடே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இதற்காக 2 kW திறன் கொண்ட பிஎம்எஸ்எம் மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த அளவு குறைவான வேகத்தில் இயங்கக் கூடிய வாகனங்களுக்கு இந்தியாவில் பதிவு செய்ய வேண்டியது அவசியமில்லை. ஆகையால், இதை இயக்க டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்று உள்ளிட்டவையும் தேவைப்படாது.
ஆகையால், நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக இதில் பயணத்தைச் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு பல்வேறு அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், பேக் ரெஸ்ட் (டிரைவர் சாய்ந்துக் கொள்ள), அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முக்கியமாக பார்சல் டெலிவரி, தண்ணீர் கேன் பிசினஸ் செய்வோர் மற்றும் சிறிய வியாபாரிகள் தங்களின் சரக்குகளை ஏற்றிச் செல்ல இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்க போகின்றது. இந்த பிரிவை மையப்படுத்தியே கிராக் இவி தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








