இந்த டுகாட்டி பைக்கின் விலையில் ஒரே எஸ்யூவி காரையே வாங்கிடலாம்! வாங்கி போட்டால் ஏரியாவிலேயே நீங்க தான் கெத்து!
இத்தாலிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி (Ducati), 2025 ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 (Streetfighter V2) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.17.50 லட்சமாகவும், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 எஸ் பைக் ரூ.19.48 லட்சம் விலையிலும் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்பட உள்ளது.
2025 டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் வி2, டுகாட்டி நிறுவனத்தின் மிட்-வெயிட் நேக்கட் பைக் (Middle-weight Naked Bike) பிரிவில் இணைகிறது. அதாவது, இதனை காட்டிலும் பவர்ஃபுல்லான பைக்குகளையும் டுகாட்டி உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறது. புதிய ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 பைக் ஆனது டுகாட்டி பனிகேல் வி2 பைக்கின் சில பாகங்கள் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் 890சிசி, திரவ-குளிரூட்டப்பட்ட, 90-டிகிரி வி-ட்வின் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 10,750 ஆர்பிஎம்-இல் 120 எச்பி சக்தியையும், 8,250 ஆர்பிஎம்-இல் 93.3 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் ஆனது இரு திசைகளில் செயல்படக்கூடிய குயிக் ஷிஃப்டரை நிலையான அம்சமாக கொண்டுள்ளது.
ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 ஒரு ஸ்டீல் ட்ரெல்லிஸ் முன் சட்டகத்தைக் கொண்டுள்ளது. இது என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ளது. துணை சட்டகங்களுக்கு இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தட்டையான ஹேண்டில்பாரை கொண்டுள்ள இந்த பைக்கின் ரைடிங் பொசிஷன் ஆனது பனிகேல் வி2 பைக்கை விட நிமிர்ந்து உள்ளது. ஏனெனில், பனிகேல் வி2 ஆனது குனிந்தப்படி ஓட்டும் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.
மேலும், இதற்காகவே புதிய ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 பைக்குகளில் ரைடர் கால் வைக்கும் ஃபுட்பெக் அமைப்பும் சரிசெய்யப்பட்டுள்ளது. டுகாட்டி இந்த பைக்கில் ஒரு பக்க அலுமினிய ஸ்விங்கார்மைப் பயன்படுத்தியுள்ளது. இது டுகாட்டி பனிகேல் வி2 பைக்கை ஒத்த கட்டமைப்பைப் கொண்டுள்ளது. அதேபோல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 பைக்கின் வீல்பேஸ் அளவும் பனிகேல் வி2 மோட்டார்சைக்கிளை ஒத்துள்ளது.
2025 டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் வி2எஸ் பைக்குகளை அவற்றின் சஸ்பென்ஷன் வேறுபடுத்துகிறது. ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 பைக் முழுமையாக சரிசெய்யக்கூடிய 43மிமீ மர்சோச்சி USD ஃபோர்க் மற்றும் முழுமையாக சரிசெய்யக்கூடிய காயாபா மோனோஷாக்கை கொண்டுள்ளது. அதேநேரம், 2025 டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் வி2எஸ் பைக், முழுமையாக சரிசெய்யக்கூடிய ஓஹ்லின்ஸ் NIX30 முன் ஃபோர்க்ஸ் மற்றும் TTX36 பின்பக்க ஷாக்கை கொண்டுள்ளது.

வி2எஸ் பைக்கின் இந்த சஸ்பென்ஷன் செட்-அப் டுகாட்டியின் சஸ்பென்ஷன் மேலாண்மை அமைப்பு மூலம் மின்னணு முறையில் சரிசெய்யப்படுகிறது. வி2 பைக்கின் எடை 178 கிலோவாகவும் (பெட்ரோல் இன்றி), வி2 எஸ் பைக்கின் எடை இலகுவான சஸ்பென்ஷன் பாகங்கள் காரணமாக 175 கிலோவாகவும் உள்ளது.
புதிய ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 பைக்குகளின் பிரேக்கிங் சிஸ்டங்களில் பிரெம்போ எம்4.32 மோனோபிளாக் காலிப்பர்களுடன் 320மிமீ-இல் இரட்டை முன் ரோட்டர்கள் மற்றும் இரண்டு-பிஸ்டன் காலிப்பர்களுடன் 245மிமீ-இல் பின் டிஸ்க் ஆகியவை அடங்கும். இந்த பைக்குகளில் பிரேக்கிங் அமைப்பு போஷ் கார்னரிங் ஏபிஎஸ் (Bosch Cornering ABS) வாயிலாக செயல்படுகிறது.
2025 டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 பைக்குகள் 17-இன்ச் அலுமினிய அலாய் சக்கரங்களில் பொருத்தப்பட்ட பிரெல்லி டியாப்லோ ரோஸ்ஸோ IV டயர்களைப் பயன்படுத்துகின்றன. பைக்கின் எலெக்ட்ரானிக்ஸ் தொகுப்பில் டயர் புரொஃபைலுக்கு ஏற்றவாறு டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் வீலி கன்ட்ரோல் உள்ளிட்டவை உள்ளன. முன்பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்-கள் கொண்ட சிறிய எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ஒரு சிறிய ஃப்ளைஸ்கிரீன் ஆகியவை உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 ஆனது டுகாட்டியின் புகழ்பெற்ற 'ஃபைட் ஃபார்முலா'-ஐ முழுமையாக வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள், சூப்பர்பைக்குகளுக்கே உண்டான உற்சாகமான பயணத்தையும், அதேநேரம் தினசரி பயணத்திற்குத் தேவையான பன்முகத்தன்மையும் கலந்த கலவையாக உள்ளது. டுகாட்டி சிவப்பு என்கிற ஒரேயொரு நிறத்தில் மட்டும் இந்த பைக் இன்று (நவ.27) முதல் அனைத்து டுகாட்டி ஷோரூம்களிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








