வெறும் 30 லட்ச ரூபா மட்டுமே... டுகாட்டி பைக்குகளிலேயே விலை அதிகமானது! யாருக்கு குடுத்து வெச்சிருக்கோ
டுகாட்டி இந்தியா (Ducati India) நிறுவனம் அதன் புதிய பனிகளே வி4 (Panigale V4) என்கிற சூப்பர்பைக்கை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பனிகளே வி4 மற்றும் வி4 எஸ் என இரு விதமான மாடல்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் முன்பு இருந்ததை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சில இலட்சங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. புதிய டுகாட்டி பனிகளே வி4 பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இத்தாலி நாட்டை சேர்ந்த சூப்பர்பைக் நிறுவனமான டுகாட்டி இந்தியாவில் அதன் மோட்டார்சைக்கிள்களை கடந்த பல வருடங்களாகவே விற்பனை செய்து வருகிறது. டுகாட்டியில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த பைக்குகளுள், பனிகளே வி4 ஒன்றாகும். அந்த அளவிற்கு இந்த டுகாட்டி பைக்கின் விலை ஏறக்குறைய சுமார் ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய 2025 பனிகளே வி4 பைக்கின் விலை ஆனது ஒருபடி மேலே போய் ஆரம்ப விலையே ரூ.30 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 பனிகளே வி4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30 லட்சம் மற்றும் வி4 எஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.36.50 லட்சம் ஆகும்.
பனிகளே வி4 பைக்கின் விலை முன்பு இருந்ததை காட்டிலும் ரூ.2.27 லட்சமும், பனிகளே வி4 எஸ் பைக்கின் விலை ரூ.3.02 லட்சமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பனிகளே வி4 பைக்குகளை முதல்முறையாக 2018ஆம் ஆண்டில் டுகாட்டி அறிமுகம் செய்தது. அதன்பின், இந்த பைக்குகளில் முக்கியமான அப்டேட்கள் தற்போதுதான் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பைக்குகளில் நிறைய அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு இருப்பினும், என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால், வழக்கமான 1,103சிசி டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் வி4 என்ஜின் தான் புதிய பனிகளே வி4 பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்போது ஐரோப்பிய தரத்துக்கு ஏற்ப யூரோ 5+ -க்கு இணக்கமானதாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு மாற்றம் கண்டுள்ளது. அதாவது, புதிய பனிகளே வி4 பைக்குகளில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13,500 ஆர்பிஎம்-இல் 216 எச்பி மற்றும் 11,250 ஆர்பிஎம்-இல் 120.9 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பை காட்டிலும் 0.5 எச்பி அதிகம் மற்றும் சில என்.எம் டார்க் திறன் குறைவாகும்.

2025 பனிகளே வி4 பைக்குகளில் முக்கியமான மாற்றங்களை பைக்குகளின் சேசிஸில் டுகாட்டி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இருப்பினும், பைக்கின் முன்பக்க ஃப்ரேமில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பைக்கின் பின்பகுதி புதிய ஸ்விங்கார்ம் சக்கர அசெம்பிளி உடன் புதிய டிசைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், முன்பு இருந்ததை விட பைக்கின் எடை 2.7 கிலோ வரையில் குறைந்துள்ளது.
முழுவதுமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ஷோவா சஸ்பென்ஷன் உடன் இந்த பைக்குகளின் சஸ்பென்ஷன் செட்-அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டயர்களும் பைரெல்லி டியாப்லோ சூப்பர்கோர்ஸா வி4 டயர்களாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றுடன், ரேஸ் இ-சிபிஎஸ் டெக்னாலஜியை கொண்ட புதிய 6.9-இன்ச் டிஎஃப்டி டேஸ்போர்டு திரையையும் இந்த இரு பைக்குகளும் பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். ஆனால், இவ்வளவு விலைக்கு ஏற்ப டுகாட்டி பனிகளே வி4 பைக்குகளில் பல அட்வான்ஸான வசதிகள் வழங்கப்படுவது தான் அவற்றிற்கான வரவேற்பை அதிகப்படுத்துகின்றன.


Click it and Unblock the Notifications









