இதுக்கு மேல ஹார்லி-டேவிட்சன் என்ன பண்ணும்... இன்னும் கம்மியாக ரூ.2.55 லட்சத்தில் பைக்!
ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) தனது புதிய 'எக்ஸ்440 டி' (X440 T) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ரூ.2.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்காக விளங்கும் எக்ஸ்440-இன் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எக்ஸ்440 டி ஒற்றை வேரியண்டில் பியர்ல் ப்ளூ, பியர்ல் ரெட், பியர்ல் ஒயிட், விவிட் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
இது வழக்கமான எக்ஸ்440 மோட்டார்சைக்கிளைக் காட்டிலும் மேம்பட்ட தோற்றத்தையும் அம்சங்களையும் கொண்டுள்ளது. எக்ஸ்440 பைக்கின் பின்னழகு வடிவமைப்பு குறித்த குறைகளை எக்ஸ்440 டி பைக்கில் ஹார்லி-டேவிட்சன் சரிசெய்துள்ளது. இதன்படி, புதிய சப்-ஃபிரேம் மற்றும் டெய்ல் செக்ஷன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, பைக்குக்கு ஒருங்கிணைந்த, நேர்த்தியான தோற்றத்தை வழங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

இது எக்ஸ்440 பைக்கில் இருக்கும் உயரமான ஃபெண்டருக்கு பதிலாக அமைந்துள்ளது. புதிய எக்ஸ்440 டி பைக்கின் மற்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களில், தட்டையான & அகலமான ஹேண்டில்பார் மற்றும் பார்-எண்ட் மிரர்கள் ஆகியவை அடங்கும். ஹேண்டில்பாருக்கு மத்தியில் காக்பிட் பகுதி நேர்த்தியாக அமைக்கப்பட்டு, கேபிள்களின் குறுக்கீடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது பைக்குக்கு மேலும் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.
புதிய எக்ஸ்440 டி பைக் ரைடு-பை-வயர் த்ராட்டில் (Ride by Wire Throttle) வசதியுடன் வந்துள்ளது. இது 'சாலை' மற்றும் 'மழை' என இரண்டு ரைடிங் மோட்களை செயல்படுத்துகிறது. 'மழை' மோட் பைக்கின் டார்க் திறனை 10 சதவீதம் குறைத்து, ஈரமான சாலைகளில் பாதுகாப்பான ஓட்டுதலை உறுதி செய்கிறது.

பாதுகாப்பு அம்சங்களாக, ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பின்பக்க ஏபிஎஸ் (ABS) உள்ளன. இவற்றை 'மழை' மோடில் பாதுகாப்பு கருதி முற்றிலுமாக அணைக்கலாம். அவசரகால பிரேக்கிங்கின் போது அனைத்து இன்டிகேட்டர்களும் ஒளிரும் வகையிலான 'பானிக் பிரேக்கிங் அலர்ட்' வசதி, இதன் பிரிவில் முதல்முறையாக வந்த ஒரு முக்கிய அம்சமாகும்.
புதிய ஸ்டைல் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் இருந்தபோதிலும், எக்ஸ்440 டி பைக்கின் இயந்திர பாகங்கள் எக்ஸ்440 பைக்கில் இருந்து மாறவில்லை. இதன்படி, வழக்கமான அதே 440சிசி, ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் தான் புதிய எக்ஸ்440 டி பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 38 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
வலுவான டார்க் திறன் மற்றும் சாலைக்கு உகந்த தன்மையுடன், இந்த என்ஜின் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகளின் வலிமையான சிறப்பாக உள்ளது. எனவே, இது புதிய எக்ஸ்440 டி பைக்கிலும் தொடர்வது நல்லதே. சேசிஸ், சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த பயண உணர்வு ஆகியவை ஸ்டாண்டர்ட் எக்ஸ்440 பைக்கிற்கு பழகியவர்களுக்கு அதே உணர்வை வழங்கும்.

எக்ஸ்440 டி பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ ப்ரீமியா டீலர்ஷிப்களிலும், ஆன்லைனிலும் இந்த பைக் கிடைக்கும். டெலிவரிகள் (Deliveries) விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எக்ஸ்440 டி பைக் வெளியீட்டுடன், ஸ்டாண்டர்ட் எக்ஸ்440 பைக்குகளின் விலைகளையும் ஹார்லி-டேவிட்சன் குறைத்துள்ளது.
எக்ஸ்440 எஸ் (S) வேரியண்ட் ரூ.2,79,500-இல் இருந்து ரூ.2,54,900 ஆகவும், (ரூ.24,600 குறைவு), எக்ஸ்440 விவிட் (Vivid) வேரியண்ட் ரூ.2,59,500-இல் இருந்து ரூ.2,34,500 ஆகவும் (ரூ. 25,000 குறைவு) விலை குறைப்பை பெற்றுள்ளன. புதிய எக்ஸ்440 டி பைக்கின் அறிமுகத்தை ஈடுச்செய்யும் விதமாக, எக்ஸ்440 பைக்கின் டெனிம் (Denim) வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கி கொடுக்கப்படும் (Custom Vehicle Operations - CVO) பைக்குகளில் புதியதாக CVO ஸ்ட்ரீட் க்ளைடு (Street Glide) மற்றும் CVO ரோடு க்ளைடு (Road Glide) வேரியண்ட்களையும் இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் அறிமுகப்படுத்தி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரூ.2- 3 லட்சம் மதிப்பிலான ரெட்ரோ ரோட்ஸ்டர் பைக்குகள் பிரிவில் ஆதிக்கம் செலுத்த ஹார்லி-டேவிட்சன் ஆர்வமாக உள்ளது. புதிய எக்ஸ்440 டி பைக் மூலம் வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு பதிலளித்து, ஏற்கனவே விரும்பப்பட்ட அம்சங்களை மெருகூட்டி இந்த அமெரிக்கன் பைக் நிறுவனம் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
ரைடு-பை-வயர் அம்சம் இருந்தாலும், புதிய எக்ஸ்440 டி பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) இல்லாதது ஒரு குறைபாடே. எனினும், இந்த பைக்கில் ஹார்லி-டேவிட்சன் மேம்பாடுகளை படிப்படியாக அறிமுகப்படுத்தலாம். திருத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் கூடுதல் அம்சங்களுடன், எக்ஸ்440 பைக்குகளின் பிளாட்ஃபார்மை புதிய எக்ஸ்440 டி ஒரு முழுமையான தயாரிப்பாக மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications









