ரெண்டுக்கும் இடையே ரூ.24,000 மட்டும்தான் வித்தியாசம்... ஹார்லி-டேவிட்சன் பைக் ஆசையை நிஜமாக்க நேரம் வந்தாச்சு!
இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 (Harley-Davidson X440) மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இந்த நிலையில், ஹார்லி-டேவிட்சனின் ஆரம்பநிலை மாடலான எக்ஸ்440 வரிசையில், புதிய 'எக்ஸ்440டி' (X440T) பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இதற்கும், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்440 பைக்கிற்கும் இடையேயான மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாடிக்கையாளர் கருத்துக்களின் அடிப்படையில், எக்ஸ்440டி பைக்கின் பின்பக்க வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்பக்க டெயில் ஃப்ரேம் இப்போது ஸ்போர்ட்டியாகவும், கூர்மையாகவும், பிரீமியமாகவும் காட்சியளிக்கிறது.

கிராப் ரெயில்கள் மறுசீரமைக்கப்பட்டு, பின்பக்கப் பயணிக்கு கூடுதல் இருக்கை இடவசதி அளிக்கிறது. ஹேண்டில்பாருக்கு இரு முனைகளில் கண்ணாடிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்பக்க ஃபெண்டர் மூலம் எக்ஸ்440டி 'ஸ்க்ராம்ப்ளர்' தோற்றத்தைப் பெற்றுள்ளது. இதற்காக, புதிய எக்ஸாஸ்ட் ஹீட் ஷீல்ட், புது கிராபிக்ஸ், டீகால்கள் உள்ளிட்டவை அதன் ஸ்போர்ட்டியான அழகை மேம்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
ரைடு-பை-வயர் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் த்ரோட்டில் பாடி ஆகியவை எக்ஸ்440டி பைக்கின் ஆக்ஸலரேஷன், பவர் டெலிவரி மற்றும் துல்லியத்தை மேம்படுத்துகின்றன. சாலை மற்றும் மழை என இரண்டு ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல் அம்சம் மற்றும் மாற்றக்கூடிய பின்பக்க ஏபிஎஸ் ஆகியவையும் புதிய எக்ஸ்440டி பைக்கில் இடம்பெற்றுள்ளன.

இத்துடன், திடீர் பிரேக்கிங் ஏற்படும்போது நான்கு இண்டிகேட்டர்களும் ஒளிரும் வகையிலான 'பானிக் பிரேக்கிங் அலர்ட் சிஸ்டம்' அவசர காலங்களில் பைக்கின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துகிறது. மற்றப்படி, புதிய எக்ஸ்440டி பைக்கிலும் அதே 440சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 6,000 ஆர்பிஎம்-இல் 27 எச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-இல் 38 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.
இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களாக, 43மிமீ கயாபா (KYB) USD ஃபோர்க்குகள், 7-விதங்களில் சரிசெய்யக்கூடிய இரட்டை ஷாக்குகள், 18/17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் மற்றும் இரு சக்கரங்களிலும் 320 & 240மிமீ அளவுகளில் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய அனைத்தும் எக்ஸ்440 பைக்கில் இருந்து அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப், 3.5-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற வசதிகளும் வழக்கமான எக்ஸ்440 பைக்கில் இருப்பதைப் போலவே உள்ளன. புதிய ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440டி பைக்கின் விலை ரூ.2.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்440 பைக்குகள் வரிசையில் டாப்-எண்ட் வேரியன்ட் ஆகும்.

அதாவது, எக்ஸ்440 பைக்கிலேயே விலைமிக்கது, புதிய எக்ஸ்440டி ஆகும். இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகத்துடன் எக்ஸ்440 பைக்கின் ஆரம்பநிலை 'டெனிம்' வேரியண்ட்டின் உற்பத்தியை ஹார்லி-டேவிட்சன் நிறுத்தி உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.34 லட்சம் ஆக இருந்தது. அதேநேரம், எக்ஸ்440 பைக்கின் எஸ் மற்றும் விவிட் வேரியண்ட்களின் விலைகளை ரூ.25,000 வரையில் ஹார்லி-டேவிட்சன் குறைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்காக விளங்கும் எக்ஸ்440-இல் ஸ்டாண்டர்ட் எக்ஸ்440 பைக்கை வாங்குவதா அல்லது புதிய எக்ஸ்440டி பைக்கை வாங்குவதா என்கிற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு ஏற்படும். ஏனெனில், இரண்டுமே கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பைக்குகளாக விளங்குகின்றன.
குறைந்த விலையில் ஹார்லி-டேவிட்சன் பைக்கை வாங்க விரும்புபவர்களுக்கு ரூ.2.55 லட்சம் மதிப்பிலான எஸ் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். இந்த அமெரிக்கன் நிறுவனத்தின் எக்ஸ்440 பைக்குகள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹோண்டா சிபி350 மற்றும் டிரையம்ப் 400 ட்வின்ஸ் போன்ற பைக்குகளுடன் போட்டியிடுகின்றன.


Click it and Unblock the Notifications









