கார்ல இருக்கற வசதிலாம் பைக்ல இருக்கு! ஆனா விலை இவ்ளோதானா! ஹீரோ ஷோரூம்களில் கூட்டம் அலைமோதிகிட்டு இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). இது 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பைக் ஆகும். தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 3 வெர்ஷன்களில் ஹீரோ க்ளாமர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவை ஹீரோ க்ளாமர், ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour XTEC) மற்றும் ஹீரோ க்ளாமர் எக்ஸ் (Hero Glamour X) ஆகியவை ஆகும். இவை மூன்றுமே 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்த பைக்குகள்தான். இதில், ஹீரோ க்ளாமர் பைக்கின் ஆரம்ப விலை 81,063 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 84,751 ரூபாய் ஆகவும் உள்ளது.

அதே நேரத்தில் ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் பைக்கின் ஆரம்ப விலை 84,106 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 88,346 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மறுபக்கம் ஹீரோ க்ளாமர் எக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 82,967 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 92,186 ரூபாய் ஆகவும் உள்ளது.
இவை அனைத்துமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹீரோ க்ளாமர் பைக் பதிவு செய்து வருகிறது.

இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ஹீரோ க்ளாமர் பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக (3 வெர்ஷன்களும் சேர்த்து), 28,823 ஹீரோ க்ளாமர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 24,356 ஹீரோ க்ளாமர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 4,467 ஹீரோ க்ளாமர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஹீரோ க்ளாமர் பைக் விற்பனையில் 18.34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes October 2025), ஹீரோ க்ளாமர் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பிளாட்டினா, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ஹோண்டா யூனிகார்ன் ஆகிய பைக்குகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ க்ளாமர் வரிசை பைக்குகளில் டாப் மாடலான ஹீரோ க்ளாமர் எக்ஸ் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கார்களில் இருப்பதை போன்ற க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
125 சிசி பைக் செக்மெண்ட்டை சேர்ந்த ஒரு பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹீரோ க்ளாமர் பைக்கின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு இவை எல்லாம் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








