ஹீரோ 2-வீலர்களின் விலை இந்த அளவுக்கு குறையும்னு எதிர்பார்க்கவே இல்ல! தீபாவளிக்கு ஒன்ன புக்கிங் போட வேண்டியதுதா
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் மற்ற 2-வீலர் நிறுவனங்களை போன்று தனது 2-வீலர்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) சீர்திருத்தங்களின் முழுப் பலனையும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும். இது ஹீரோவின் இரு சக்கர வாகனங்களின் விலையைக் கணிசமாகக் குறைக்கும். இதனால் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு போக்குவரத்து எளிமையாகும்.

பண்டிகைக் காலம் நெருங்குவதால், இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்கள் இரு சக்கர வாகனத் துறைக்கு அதிக தேவை உள்ள காலகட்டமாகும். இந்தச் சலுகைகள் மூலம், ஹீரோ மோட்டோகார்ப் குறிப்பாக கிராமப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்க விரும்புகிறது.
இரு சக்கர வாகனங்கள் இந்தியாவின் போக்குவரத்து, வாழ்வாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விலை குறைப்புகள் நுகர்வோர் மத்தியில் நேர்மறையான உணர்வை ஏற்படுத்தும் என்றும், இரு சக்கர வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் தனிநபர் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது.

ஹீரோ 2-வீலர்களின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலைகளில் கிடைக்கும் ஜிஎஸ்டி சலுகைகளின்படி, ஹீரோ டெஸ்டினி 125 (Hero Destini 125) ஸ்கூட்டரின் விலை ரூ.7,197 வரையிலும், கிளாமர் எக்ஸ் (Glamour X) பைக்கின் விலை ரூ.7,813 வரையிலும், எச்எஃப் டீலக்ஸ் (HF Deluxe) பைக்கின் விலை ரூ.5,805 வரையிலும் குறைக்கப்பட உள்ளன.
விலையுயர்ந்த ஹீரோ கரிஸ்மா 210 (Karizma 210) பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15,743 வரையிலும், பேஷன்+ (Passion+) பைக்கின் விலை ரூ.6,500 வரையிலும், பிளஷர்+ (Pleasure+) பைக்கின் விலை ரூ.6,417 வரையிலும், ஸ்பிளெண்டர்+ (Splendor+) பைக்கின் விலை ரூ.6,820 வரையிலும், சூப்பர் ஸ்ப்ளெண்டர் எக்ஸ்டெக் (Super Splendor XTEC) பைக்கின் விலை ரூ.7,254 வரையிலும் குறைக்கப்பட உள்ளன.

மேலும், ஹீரோ ஸூம் 110 (Xoom 110) ஸ்கூட்டரின் விலை ரூ.6,597 வரையிலும், ஸூம் 125 (Xoom 125) ஸ்கூட்டரின் விலை ரூ.7,291 வரையிலும், ஸூம் 160 (Xoom 160) ஸ்கூட்டரின் விலை ரூ.11,602 வரையிலும், எக்ஸ்பல்ஸ் 210 (Xpulse 210) பைக்கின் விலை ரூ.14,516 வரையிலும் குறைக்கப்படுகிறது.
இவற்றுடன், எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Xtreme 125R) பைக்கின் விலை ரூ.8,010 வரையிலும், எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (Xtreme 160R 4V) பைக்கின் விலை ரூ.10,985 வரையிலும், எக்ஸ்ட்ரீம் 250ஆர் (Xtreme 250R) பைக்கின் விலை ரூ.14,055 வரையிலும் ஜிஎஸ்டி சலுகையாக விலை குறைப்பை பெற்றுள்ளன.
| மாடல் | சலுகை தொகை |
|---|---|
| டெஸ்டினி 125 | ரூ. 7,197 வரை |
| கிளாமர் எக்ஸ் | ரூ. 7,813 வரை |
| எச்எஃப் டீலக்ஸ் | ரூ. 5,805 வரை |
| கரிஸ்மா 210 | ரூ. 15,743 வரை |
| பேஷன்+ | ரூ. 6,500 வரை |
| பிளஷர்+ | ரூ. 6,417 வரை |
| ஸ்பிளெண்டர்+ | ரூ. 6,820 வரை |
| சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் | ரூ. 7,254 வரை |
| ஸூம் 110 | ரூ. 6,597 வரை |
| ஸூம் 125 | ரூ. 7,291 வரை |
| ஸூம் 160 | ரூ. 11,602 வரை |
| எக்ஸ்பல்ஸ் 210 | ரூ. 14,516 வரை |
| எக்ஸ்ட்ரீம் 125ஆர் | ரூ. 8,010 வரை |
| எக்ஸ்ட்ரீம் 160R 4வி | ரூ. 10,985 வரை |
| எக்ஸ்ட்ரீம் 250ஆர் | ரூ. 14,055 வரை |

இந்த விலை குறைப்பு குறித்து பேசிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் காஸ்பேகர், "அரசின் புதிய ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களை நாங்கள் வரவேற்கிறோம். இது மக்கள் பொருட்கள் வாங்குவதை ஊக்குவித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி, இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை விரைவுப்படுத்தும்," என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "இந்தியக் குடும்பங்களில் பாதிக்கும் மேல் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு பெரிய மக்கள் தொகைக்கான போக்குவரத்திற்கு இன்றியமையாதது. பண்டிகைக் காலத்திற்கு முன்பாக இந்தச் சலுகை அறிவிக்கப்படுவது சரியான தருணம். இது இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் தளத்திற்கு இரு சக்கர வாகனங்களை மேலும் மலிவாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது" என குறிப்பிட்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிக்கையாளர்களுக்கு முழு ஜிஎஸ்டி பலனையும் வழங்குவதன் மூலம், போக்குவரத்து எளிமைப்படுத்துவதற்கும், குடும்பங்களை மேம்படுத்துவதற்கும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிப்பதற்கும் ஹீரோ மோட்டோகார்ப் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன், மக்களின் தேவைக்கு ஒரு வலுவான ஊக்கத்தையும் அளிக்கிறது.


Click it and Unblock the Notifications









