ஹீரோ கம்பெனி இந்த முறை குறி வெச்சா தப்பாது! புக்கிங் எப்போது துவங்கும்னு காத்திருந்தது போதும்!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்பல்ஸ் 210 (Xpulse 210) மற்றும் எக்ஸ்ட்ரீம் 250ஆர் (Xtreme 250R) பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சமீபத்தில் டெல்லியில் கோலாக்கலமாக நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பைக்குகளின் முன்பதிவுகள் அறிவிக்கப்படி இன்று (மார்ச் 20) துவங்கப்பட உள்ளது. இந்த புதிய ஹீரோ பைக்குகளை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பின் பலமே எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதை சரியாக தெரிந்து வைத்திருப்பது ஆகும். அதன் மூலமாகவே, இந்தியா மட்டுமின்றி உலகளவில் மிக பெரும் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

அதாவது, எக்ஸ்பல்ஸ் 200 என்கிற பைக்கை சில வருடங்களுக்கு முன் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது. அது இந்த அளவிற்கு மக்கள் நல்ல வரவேற்பை பெறும் என ஆரம்பத்தில் ஹீரோ கணித்ததா என தெரியவில்லை. ஆனால், ஹீரோ எக்ஸ்பல்ஸ் என்கிற அட்வென்ச்சர் பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை புரிந்துக் கொண்ட ஹீரோ நிறுவனம் உடனடியாக அதன் மேம்படுத்தப்பட்ட வெர்சனை உருவாக்க ஆரம்பித்தது.
அதன்படி, புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அதேபோல், எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை சில வருடங்களுக்கு முன் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், அதற்கு பெரியதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், ஹோண்டா (Honda), பஜாஜ் (Bajaj), டிவிஎஸ் (TVS) உள்ளிட்ட மற்ற போட்டி நிறுவனங்களில் இருந்து 160சிசி பைக்குகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. அவற்றுடன், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கால் தாக்குப்பிடிக்கவில்லை.

இதனையடுத்து, தனது யுக்தியை மாற்றி 125சிசி என்ஜின் உடன் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கை அறிமுகம் செய்தது. இந்த பிரிவிலும், பல பிரபலமான 125சிசி பைக்குகள் இருப்பினும், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் தனது அசத்தலான தோற்றத்தின் மூலமாக மக்களை கவர ஆரம்பித்தது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 125சிசி பைக்குகளுள் எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஒன்றாகும்.
இதனாலேயே, எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை உருவாக்க ஆரம்பித்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதனை விற்பனைக்கு கொண்டுவந்து உள்ளது. இவ்வாறு, மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ள இந்த இரு பைக்குகளுக்கான முன்பதிவுகளை தான் மார்ச் 20ஆம் தேதியான இன்று ஹீரோ நிறுவனம் துவங்கவுள்ளது.

முன்னதாக இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே துவங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், சற்று தாமதமாக இந்த மார்ச் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இருப்பினும், விரைவாக இந்த மார்ச் மாதம் முடிவதற்கு உள்ளாகவே இவற்றை புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக் ஆனது பேஸ் மற்றும் டாப் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.75 லட்சம் மற்றும் ரூ.1.86 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மறுப்பக்கம், புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.80 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்வதற்காகவே பிரீமியா (Premia) என்கிற பெயரில் டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms)-ஐ துவங்கியுள்ளது. அவற்றில்தான் இந்த புதிய பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. விருப்பப்படுவோர் ஹீரோ மோட்டோகார்பின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் இந்த பைக்குகளை முன்பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications









