1984இல் கம்பெனி திறந்த போது இது எல்லாம் நடக்கும்னு நெனைச்சு இருப்பாங்களா? 41 வருடங்கள் போனதே தெரியல!!
இந்திய இருசக்கர வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் (Hero Honda Motors), 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது தனித்தனியாக செயல்படும் இந்த நிறுவனம் 1985-ல் சிடி100 (CD100) பைக்குகள் உற்பத்தியைத் தொடங்கியது. இந்த 41 ஆண்டுகளில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) என்ற தற்போதைய பெயரில், 125 மில்லியன் (12.5 கோடி) இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தச் சாதனையைச் சிறப்பிக்கும் வகையில், ஸ்பிளெண்டர்+ (Splendor+), பேஷன்+ (Passion+) மற்றும் விடா வி.எக்ஸ்2 (Vida VX2) ஆகிய இருசக்கர வாகனங்களின் சிறப்பு லிமிடெட் எடிஷன்களை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய லிமிடெட் எடிசன் மூலமாக மேற்கூறப்பட்ட மாடல்களில் புதிய வண்ணங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். ஹீரோ நிறுவனம் 1987-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றது. அதன் பிறகு, 1994-ல் இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், ஒரு மில்லியன் யூனிட் உற்பத்தியை ஹீரோ எட்டியது.
2001-ல் பேஷன் பைக் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2005-ல் பிளஷர் ஸ்கூட்டர் மூலம் ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோ நுழைந்தது. 2009-ஆம் ஆண்டில், ஹீரோ நிறுவனம் 25 மில்லியன் யூனிட் உற்பத்தியை அடைந்தது. பின்னர் 2011-ல் ஹீரோ ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆக மாறியது.

2015-ல் 50 மில்லியன் யூனிட்களை எட்டிய ஹீரோ மோட்டோகார்ப், 2017-ல் 75 மில்லியன் யூனிட் மைல்கல்லைக் கொண்டாடியதுடன், 2020-ல் ஹார்லி-டேவிட்சனுடன் ஒரு முக்கியமான கூட்டுறவை ஏற்படுத்தி கொண்டது. 2021-ல் 100 மில்லியன் யூனிட் மைல்கல்லைத் தொட்ட ஹீரோ, தற்போது 2025-ல் 125 மில்லியன் யூனிட் மைல்கல்லை எட்டியுள்ளது.
41 ஆண்டுகளில் இத்தகைய ஒரு அசாத்திய சாதனையை ஹீரோ நிறுவனம் எட்டியுள்ளது. தற்போது உலக அளவில் 48 நாடுகளில் தனது செயல்பாடுகளை ஹீரோ பரப்பியுள்ளது. இந்த மாபெரும் மைல்கல்லைக் கொண்டாடும் விதமாகவே ஸ்பிளெண்டர்+, பேஷன்+ மற்றும் விடா வி.எக்ஸ்2 ஆகியவற்றின் 125 மில்லியன் எடிஷன்களை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிறப்புமிக்க மாடல்கள் நிறுவனத்தின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ஸ்பிளெண்டர்+ மற்றும் பேஷன்+ ஆகிய இரண்டும் 100cc ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் ஆகும். இவை இரண்டுக்கும் 125 மில்லியன் எடிஷன் சிறப்புத் தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்களின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அனைத்து அம்சங்களும், பவர்டிரெய்ன் அமைப்பும் அப்படியே தொடர்கின்றன.
இந்த சிறப்பு எடிஷன்களில் புதிய கிரே நிறம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பல ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் Nardo Grey-யை ஒத்திருக்கிறது. கவர்ச்சியான இந்த நிறத்துடன் கருப்பு, பழுப்பு, மற்றும் தங்க நிறங்களில் நேர்த்தியான கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்கில் 125 மில்லியன் என்று பொறிக்கப்பட்ட 3டி தகடு உள்ளது.
விடா விஎக்ஸ்2 125 மில்லியன் எடிஷனில் தனித்துவமான புதிய நிறம் இல்லை. மாறாக, அதே வண்ணங்கள் தொடர்கின்றன. எனினும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) முன்பக்க அப்ரானில் 125 மில்லியன் என்று குறிக்கப்பட்ட 3டி தகடு இடம்பெற்றுள்ளது. இது இந்த ஸ்கூட்டரின் சிறப்பு எடிஷன் நிலையை உணர்த்துகிறது. இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 41 வருடங்களில் 12.5 கோடி இருசக்கர வாகனங்கள் உற்பத்தி என்பது உண்மையில் அசாத்தியமான காரியம் ஆகும். இதில் இருந்து, இந்திய மக்கள் ஹீரோவின் தயாரிப்புகள் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை அறியலாம். மேலும், இந்த 12.5 கோடி வாகனங்கள் உற்பத்தியில் ஹோண்டாவின் பங்களிப்பும் நிச்சயம் இல்லாமல் இருக்காது.


Click it and Unblock the Notifications









