100கிமீ பயணத்துக்கு ரூ.96 செலவு பண்ணா போதுமா? ரூ.60 ஆயிரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டுவர பெரிய மனசு வேணும்
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் கீழ் செயல்படும் விடா (Vida) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விஎக்ஸ்2 (VX2) என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டது போல் ஜூலை 1ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்தப்படி, வெறும் ரூ.59 ஆயிரத்து 490 என்கிற குறைவான விலையில் வாங்கக்கூடியதாக விடா வி.எக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் BaaS திட்டத்தின்படி பேட்டரி இல்லாமல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். புதிய விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்காகவே விடா என்கிற நிறுவனத்தை கடந்த ஆண்டில் அறிமுகம் செய்து வி1 (V1) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்தது. அதன்பின், இந்த வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வி2 என மாறிய போதிலும், இரண்டிற்கும் தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.

வி1 ஸ்கூட்டரின் அப்டேட் வெர்சனாகவே வி2 கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் நிறைய வித்தியாசங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது. நாம் எதிர்பார்த்தப்படி, வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் விலை குறைவானதாக விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே நாங்கள் தெரிவித்தப்படி, கோ (Go) மற்றும் பிளஸ் (Plus) என இரு விதமான வேரியண்ட்களில் விஎக்ஸ்2 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கோ வேரியண்ட்டில் அளவில் சிறியதான 2.2kWh திறன் கொண்ட பேட்டரியும், பிளஸ் வேரியண்ட்டில் சற்று பெரியதான 3.4kWh திறன் கொண்ட பேட்டரியும் கிடைக்கும்.

மேலே குறிப்பிடப்பட்ட ரூ.59,490 ஆனது பேட்டரி இல்லாமல் கோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். பேட்டரி இல்லாமல், BaaS முறையில் ஸ்கூட்டருக்கான பேட்டரி வழங்கப்படும். அதாவது, பேட்டரியின் சார்ஜ் காலியானால், அந்த காலியான பேட்டரியை அருகில் உள்ள ஏத்தர் பேட்டரி ஸ்வாப்பிங் (Swapping) மையத்தில் கொடுத்து சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை கட்டணத்துடன் பெறலாம்.
இதன் மூலமாக, சார்ஜ் நிரம்புவதற்காக காத்திருக்க வேண்டிய நேரத்தை மிச்சப்படுத்தலாம். BaaS திட்டத்தின்படி, பேட்டரி இல்லாமல் விஎக்ஸ்2 ஸ்கூட்டரின் பிளஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64,990 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழக்கம்போல் பேட்டரி உடனும் வாங்கலாம்.

பேட்டரி உடன் இந்த ஸ்கூட்டரின் கோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,490 ஆகவும், பிளஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1.10 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச விலையே ரூ.1.10 லட்சம் மட்டுமே ஆகும். அதுவே, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.85 ஆயிரத்தில் இருந்து துவங்குகின்றன.
விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 2.2kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 92கிமீ தொலைவிற்கும், பிளஸ் வேரியண்ட்டின் 3.4kWh பேட்டரியை சார்ஜ் நிரப்புவதன் மூலம் 142கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம். BaaS திட்டத்தின்படி ஸ்கூட்டரை வாங்கினால், ஒரு கிமீ தூர பயணத்திற்கு 96 பைசாவை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: BaaS முறை ஆனது பரவலாக அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களிலும் படிப்படியாக கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், மக்களிடம் இருந்து அந்த அளவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதினால் ஆகும். 100கிமீ பயணத்திற்கு ரூ.96 செலவு செய்தால் போதும் எனும்போது, புதிய ஹீரோ விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறைய பேர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலமாக, விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









