ஹீரோ பைக் வந்ததும் தெரியல, போனதும் தெரியல! சைலண்ட்டா மார்கெட்டை விட்டு போய்டுச்சு!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்த அளவிற்கான உயரத்தை எட்ட ஹீரோ நிறுவனம் கடந்த காலங்களில் இருந்து பல தரமான 2-வீலர்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பிளெண்டர் (Splendor), பேஷன் புரோ (Passion Pro), எச்.எஃப் டீலக்ஸ் (HF Deluxe) உள்ளிட்டவை எல்லாம் அவற்றான தரமான ஹீரோ 2-வீலர்கள் ஆகும். அதேநேரம், ஹீரோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட சில 2-வீலர்கள் கவனத்தை பெறாமலும் போய் உள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணம், ஹீரோ மாவ்ரிக் 440 (Mavrick 440) பைக் ஆகும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ததிலேயே விலைமிக்க 2-வீலராக மாவ்ரிக் 440 விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தியாவில் விலையுயர்ந்த பைக்குகளுக்கு பெரியதாக வரவேற்பு இருக்காது, அதுவும் ஹீரோ நிறுவனத்தில் இருந்து விலைமிக்க பைக்கை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு எந்த அளவிற்கு வாய்ப்புள்ளது என்பது தெரியவில்லை என மாவ்ரிக் 440 பைக்கின் அறிமுகத்தின்போதே தெரிவித்து இருந்தோம்.
அதன்படி, மாவ்ரிக் 440 பைக்கின் விற்பனையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது. இந்த விலைமிக்க 440சிசி பைக்கிற்கான முன்பதிவுகள் (Bookings) நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளன. தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு (Dealership Showrooms) மாவ்ரிக் 440 பைக்குகளை அனுப்புவதையும் ஹீரோ நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது.

இன்னும் சொல்லப் போனால், கடந்த 3 மாதங்களில் ஒரு மாவ்ரிக் 440 பைக் கூட ஹீரோ மோட்டோகார்ப் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவில்லை. அதாவது, கடந்த 3 மாதங்களில் ஒரு மாவ்ரிக் 440 பைக் கூட விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு முன்பும் கூட ஒரு மாதத்தில் 100க்கு மேல் மாவ்ரிக் 440 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதே கிடையாது.
இதை எல்லாம் பார்த்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது வேறு வழியில்லாமல் மாவ்ரிக் 440 பைக்கின் விற்பனையை நிறுத்திக் கொண்டுள்ளது. ஹீரோ மாவ்ரிக் 440 பைக் ஆனது ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 (Harley-Davidson X440) பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். அதாவது, ஹீரோவும், ஹார்லி-டேவிட்சன் நிறுவனமும் கூட்டணி சேர்ந்த பிறகு எக்ஸ்440 பைக்கை உருவாக்கின; பின்னர் அதே பாணியில் மாவ்ரிக் 440 பைக்கையும் உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவந்தன.

ஆனால், எக்ஸ்440 ஆனது இந்தியாவில் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்காக இருக்கும் நிலையில், மாவ்ரிக் 440 ஆனது விலைமிக்க ஹீரோ பைக் ஆகும். விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்காக இருப்பதினாலேயே எக்ஸ்440 பைக்கின் விற்பனை ஓரளவிற்கு நல்லப்படியாக உள்ள போதிலும், கிட்டத்தட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படும் ஹீரோ மாவ்ரிக் 440 பைக்கை அதிகம் யாரும் வாங்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல, ஹார்லி-டேவிட்சன் பைக்கை பார்த்து, அதேபோன்று தானும் ஒரு பைக்கை உருவாக்குகிறேன் என ஹீரோ நிறுவனம் பெரிய பல்ப் வாங்கியுள்ளது. எக்ஸ்440, மாவ்ரிக் 440 இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்த அளவிற்கு விலை கொண்ட பைக்கை ஹார்லி-டேவிட்சன் பிராண்டில் வாங்கவே பலரும் விரும்புவர். அதேநேரம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை போன்று ஒரே மாதத்தில் இலட்சக்கணக்கிலான பைக்குகளை ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications









