சைலன்சரில் புகையை பார்க்குறது ரொம்ப அபூர்வம்... லட்சக்கணக்கான மக்கள் வாங்கும் பைக்கில் இப்படியொரு அப்டேட்டா?
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் செயல்படுவதினாலேயே உலகின் மிக பெரும் 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் அடையாளமே அதன் ஸ்பிளெண்டர் (Splendor) பைக்குகள் ஆகும். ஹீரோ நிறுவனம் விற்பனை செய்வதில் பாதிக்கும் மேல் ஸ்பிளெண்டர் பைக்குகள் ஆகும். இதனாலேயே, புது, புது மாடல்களில் ஸ்பிளெண்டர் பைக்குகளை கொண்டுவர ஹீரோ மோட்டோகார்ப் விரும்புகிறது.
மேலும், ஸ்பிளெண்டர் பைக்குகளை அவ்வப்போது அப்டேட் செய்யவும் ஹீரோ நிறுவனம் மறப்பது இல்லை. அதன்படி, ஒபிடி2பி அப்டேட்டை (OBD2B Update) பெற்ற ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட 2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது 2025 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் (Super Splendor XTEC) பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒபிடி2பி விதிமுறைகளை எந்தவொரு சமரசமுமின்றி பின்பற்றி புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கை ஹீரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. பிஎஸ்6 (BS6) விதிமுறைகளின் 2ஆம் கட்டமாக பார்க்கப்படும் ஒபிடி2பி விதிமுறைகள் பைக்கில் இருந்து வெளிவரும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ளன.
பைக்கில் இருந்து வெளியிடப்படும் காற்று மாசுவின் அளவை ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கும் கருவி இந்த அப்டேட்டின் படி பொருத்தப்பட வேண்டும். அத்துடன், பைக்கில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது உடனே டிரைவருக்கு தெரிவிக்கும் வகையில் பைக் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடியதாக புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கி உள்ளது.

ஒபிடி2பி அப்டேட்டினால் பைக்கின் விலை வெறும் ரூ.2,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டு, ரூ.88,128 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒபிடி2பி அப்டேட்டிற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் 124.7சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10.8 எச்பி மற்றும் 10.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
சாதாரணமான ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கும் விற்பனையில் உள்ளது. ஸ்டாண்டர்ட் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கிற்கும், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கிற்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் ஆனது கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களை கொண்டதாக உள்ளது.

அந்த கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களுள் முக்கியமானது, ப்ளூடூத் இணைப்பு வசதியை கொண்ட ஃபுல் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் (Fully Digital Speedometer) ஆகும். புதிய 2025 சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக் டிரம் பிரேக் (Drum Brake) மற்றும் டிஸ்க் பிரேக் (Disc Brake) என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.88,128 மற்றும் ரூ.90,028 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கின் விலைகள் முன்பை விட வெறும் ரூ.2,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டு இருப்பது எங்களை பெரியதாக ஆச்சிரியப்படுத்தவில்லை. ஏனெனில், ஒபிடி2பி அப்டேட்டை தவிர்த்து புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்கில் வேறெந்த அப்டேட்களும் இல்லை.
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை எப்போதும்போல் சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒபிடி2பி அப்டேட் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். மேலும், இலட்சக்கணக்கிலான மக்கள் வாங்கும் பைக் குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடியதாக மாறியிருப்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகும்.


Click it and Unblock the Notifications









