ஸ்கூட்டரை பார்த்து எல்லாரும் மயங்கிட்டாங்க... ஹீரோ கம்பெனி உருவாக்குனா எதாச்சும் குறை சொல்ல முடியுமா?
ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் பல்வேறு புதிய வாகனங்களை காட்சிப்படுத்தி உள்ளது. அவற்றுள், விடா இசட் (Vida Z) ஒன்றாகும். ஹீரோ விடா பிராண்டில் கொண்டுவரப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த புதிய ஹீரோ விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் கடந்த சில வருடங்களில் பல்வேறு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பும் 'விடா' (Vida) என்கிற பெயரில் புதியதாக ஒரு பிராண்டை உருவாக்கி, அதில் தனது எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

அதாவது, நேரடியாக ஹீரோ மோட்டோகார்பில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படாமல், விடா பிராண்டின் வாயிலாக ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனை செய்யும் திட்டம் இருந்தாலும், தற்போதைக்கு ஹீரோ விடாவில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
விடா பிராண்டில் இருந்து முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக 'வி1' (V1) அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், 2025 ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் இத்தாலி நாட்டில் நடைபெற்ற EICMA கண்காட்சியிலும் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால், இந்த புதிய ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இந்திய மார்க்கெட்டை மட்டுமின்றி, ஐரோப்பிய மார்க்கெட்டையும் டார்க்கெட் செய்து கொண்டுவரப்படுவதை அறிய முடிகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், விலையை குறைவாக நிர்ணயிக்க வேண்டி முடிந்தவரையில் குறைவான பாடி பேனல்கள் உடன் விடா இசட் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், ஸ்கூட்டரை சுற்றிலும் இருப்பவை எல்இடி (LED) விளக்குகள் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நீக்கக்கூடிய பேட்டரி மற்றும் நிரந்தர-காந்தக மின்னியக்குவிசை மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 4.4 கிலோ வாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக வெளியே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், சார்ஜ் செய்வது எளியதாக இருக்கும். மற்றப்படி, இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் எந்த அளவிற்கு டார்க் திறனை பெற முடியும் என்கிற விபரங்கள் இல்லை. அதேபோல், புதிய விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போதைக்கு தெரிவிக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்க்கும்போது, விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆதலால், ஹீரோ விடாவில் இருந்து வருங்காலங்களில் அறிமுகம் செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் யாவும் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









