ஓலா கம்பெனி மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியதுதான்! ஹீரோவின் இ-ஸ்கூட்டரை பற்றித்தான் இப்போ பேச்சு!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. பெட்ரோல் 2-வீலர்கள் விற்பனையில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் ஹீரோ நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனையிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியாக 'விடா' (Vida) என்கிற பிராண்டை சில வருடங்களுக்கு முன் நிறுவியது. ஹீரோ விடா பிராண்டில் இருந்து தற்சமயம் வி2 (V2) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் கோவாவில் நடைபெற்ற பைக் கண்காட்சி நிகழ்ச்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது 4 புதிய 2-வீலர்களை காட்சிக்கு நிறுத்தியது. அவற்றுள், ஹீரோ விடா இசட் (Z) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றாகும். இந்தியா உள்பட உலக நாடுகளுக்கான தயாரிப்பாக இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது.

விரைவில் விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. புதிய விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
விற்பனையில் இருக்கும் விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில், கிளாசிக் தோற்றத்தை கொண்டதாக புதிய விடா இசட் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, விடா வி2 ஸ்கூட்டரில் ஷார்ப்பான லைன்கள் அதிகமாக வழங்கப்படும் நிலையில், புதிய விடா இசட் ஸ்கூட்டரில் அவ்வாறான ஷார்ப்பான லைன்கள் எதுவும் வழங்கப்படாததை 2024இன் இறுதியில் நடைபெற்ற கண்காட்சியிலேயே பார்த்து இருந்தோம்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் ஸ்கூட்டர் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்பட்டு இல்லாததால், புதிய விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றத்தை தெளிவாக காண முடிகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் மஞ்சள் நிறத்தில் விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. 2024இல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததற்கும், தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருப்பதற்கும் இடையே விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சில வித்தியாசங்களை காண முடிகிறது.
அதாவது, கடந்த ஆண்டு இறுதியில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதற்கு பிறகு, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உருவாக்கத்தில் ஹீரோ நிறுவனம் வேலை செய்துள்ளதை இது காட்டுகிறது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், 2024 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த விடா இசட் ஸ்கூட்டரில் ஆரஞ்சு நிற ஹைலைட்கள் இருந்தன. ஆனால், அதனை இந்த சோதனை விடா இசட் ஸ்கூட்டரில் பார்க்க முடியவில்லை.

அதேபோல், பின் இருக்கை பயணி பிடித்துக் கொள்வதற்கான கைப்பிடியை தற்போது காட்சி தந்துள்ள விடா இசட் ஸ்கூட்டரில் பார்க்க முடியவில்லை. இந்த புதிய ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்ற சிறப்பம்சங்களாக, இரட்டை நிறங்களில் உள்ள ஹேண்டில்பார் கௌல் மற்றும் முன்பக்க மட்கார்ட்டை சொல்லலாம். ஸ்கூட்டரின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்கள் எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் வழங்கப்பட்டுள்ளன.
இருக்கை ஆனது சிங்கிள்-பீஸாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ஹேண்டில்பாருக்கு மத்தியில் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றப்படி, புதிய விடா இசட் ஸ்கூட்டரில் வழங்கப்பட உள்ள பேட்டரி ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஸ்கூட்டரை உருவாக்க பயன்படுத்தப்பட்ட பிளாட்ஃபாரத்தில் 2.2kWh திறனில் இருந்து 4.4kWh திறன் கொண்ட பேட்டரியை பொருத்த முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து க்யூ.சி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டதுபோல், விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதனால், புதிய விடா இசட் ஸ்கூட்டரை குறைந்த விலையில் எதிர்பார்க்கலாம். மேலும், சோதனை ஓட்டங்கள் ஆரம்பமாகி உள்ளதால், புதிய விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









