ரூ.1.50 லட்சத்தில் ஸ்கூட்டர் தயாரித்து ஷாக் கொடுத்த ஹீரோ... பிரம்மாண்டமான ஸ்கூட்டரா இருக்கே!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் டெல்லியில் நடைபெற்றுவரும் 2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அதன் புதிய ஸூம் 160 (Xoom 160) ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹீரோ 160சிசி ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஹீரோ மோட்டோகார்பின் புதிய மேக்ஸி ஸ்கூட்டராக ஸூம் 160 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக EICMA 2023 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத போதிலும், ஸூம் 160 ஸ்கூட்டர் அதன் பெரிய அளவிலான தோற்றத்தின் மூலமாக ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கே உண்டான நிமிர்ந்த தோற்றத்துடன், பெரிய விண்ட்ஸ்க்ரீனை கொண்டுள்ள புதிய ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டரில் பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய ஹெட்லைட் செட்-அப்பை அட்வென்ச்சர் பைக்குகளில் பார்க்க முடியும். இந்த ஸ்கூட்டரில் 156சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 14 பிஎஸ் மற்றும் 13.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. புதிய ஸூம் 160 ஸ்கூட்டரில் ஹீரோவின் ஐ3எஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு ஐடியல்-ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் ஆகும். இது ஸ்கூட்டரின் அதிக மைலேஜுக்கு வழிவகுக்கக் கூடியது.
சஸ்பென்ஷனுக்கு முன் & பின்பக்கத்தில் முறையே டெலெஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்களை கொண்டுள்ள இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டரில் பிரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் பிளாக் பேட்டர்ன் டயர்கள் உடன் 12-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளன.

இவற்றுடன், புதிய ஸூம் 160 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆனது ஸ்மார்ட்போன் கனெட்டிவிட்டி மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதிகளை கொண்டுள்ளது. மேலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்கூட்டரின் திரை மூலமாகவே கண்ட்ரோல் செய்யலாம். என்ஜினை ஸ்டார்ட் செய்ய சாவியில்லா இக்னிஷன் வசதியும் இந்த ஸ்கூட்டரில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டரின் சாவியில்லா ஸ்டார்ட் வசதி மிகவும் பிரீமியம் தரத்திலானதாக உள்ளது. இது கஸ்டமர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் இந்த புதிய ஹீரோ 160சிசி ஸ்கூட்டருக்கு ஏப்ரிலியா எஸ்.ஆர்160 மற்றும் யமஹா ஏரோக்ஸ் 155 உள்ளிட்ட மேக்ஸி ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications









