ஹோண்டாவுக்கு வேற வழி தெரியல... பல லட்ச ரூபாயில் விலை இருப்பினும் எல்லாரும் வாங்கி குவிச்சிட்டாங்க!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேடு எஸ்.பி (CBR1000RR-R Fireblade SP) மற்றும் ரெபல் 500 (Rebel 500) ஆகிய இரு பைக்குகளின் பெயர்களை எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலண்ட்டாக நீக்கியுள்ளது. சிபியூ (CBU) முறையில் வெளிநாட்டில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பைக்குகளின் தொகுப்பு விரைவாக விற்றுத் தீர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேடு எஸ்பி மற்றும் ரெபல் 500 பைக்குகளை ஹோண்டாவின் இந்திய இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்டதாகத் தோன்றினாலும், ஹோண்டாவின் சந்தை அணுகுமுறையை உற்று நோக்கினால், இது ஒரு வழக்கமான செயல்பாடு என்பது புரியும்.

இவ்வாறு, முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் உயர்தரப் பைக்குகளுக்கு, ஹோண்டா ஒரு சுழற்சி முறையைப் பின்பற்றுகிறது. அதாவது, இத்தகைய விலையுயர்ந்த பைக்குகளுக்கான தேவை மதிப்பீடு செய்யப்பட்டு ஓர் சிறிய தொகுப்பு விற்பனைக்காக ஒதுக்கப்படும். அந்த அனைத்து யூனிட்களும் விற்றவுடன், அந்த மாடல் தற்காலிகமாக இணையதளத்தில் இருந்து அகற்றப்படும்.
இதுதான் தற்போது இந்த இரு விலையுயர்ந்த ஹோண்டா பைக்குகளின் விஷயத்திலும் நடந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த இரு பைக்குகளுக்கும் கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டால், முதல் ஒதுக்கீடு விரைவாக விற்றுத் தீர்ந்திருக்க வேண்டும். ஆகவே, இந்த பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் தற்போது விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பது எல்லாமே ஹோண்டாவின் சந்தை யுக்தியின் ஒரு பகுதியே.

தற்போது, ஹோண்டா வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டுள்ள இரு பைக்குகளுள் ரெபல் 500 ஆனது இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வகை குரூஸர் சந்தையில் ஹோண்டாவின் முதல் முக்கியமான மோட்டார்சைக்கிளாக இருந்தது. இதன் 471cc பேரலல்-ட்வின் என்ஜின் அதிகப்பட்சமாக 45.5 எச்பி சக்தியையும் 43.3 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது.
எளிதில் அணுகக்கூடிய, குறைந்த வேகத்தில் அதிக டார்க் திறனை வழங்கும் வகையில் இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டது. தரையில் இருந்து 690மிமீ உயரத்தில் ஓட்டுனர் இருக்கை மற்றும் வசதியான பயண சூழல் உள்ளிட்டவை பல்வேறு அனுபவ நிலை கொண்ட ஓட்டுநர்களுக்கும் ஏற்றதாக இதை மாற்றியது. ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் அமைப்பு எளிமையாகவும், விரைவாக செயல்படக்கூடியதாகவும் இருந்தன.

ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேடு எஸ்பி பைக்கை பொறுத்தவரையில், இது ஹோண்டாவின் செயல்திறன்மிக்க பைக்குகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. 999cc இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் 214.5 bhp சக்தியையும், 113 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் இரு-திசை குயிக் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் தரத்திலான பாகங்கள், ஓஹ்லின்ஸ் எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன், ப்ரெம்போ பிரேக்குகள் மற்றும் ஐந்து இன்ச் TFT டிஸ்பிளே மூலம் காட்டப்படும் விரிவான எலக்ட்ரானிக் உதவிகள் கொண்ட தொகுப்பு உள்ளிட்டவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்கப்படும் மிக மேம்பட்ட சூப்பர்ஸ்போர்ட் பைக்குகளில் ஒன்றாக இதை முன் நிறுத்துகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு பைக்குகளும் நீக்கப்பட்டது, ஹோண்டாவின் வழக்கமான சிபியூ அணுகுமுறைக்கு ஒத்ததாகவே தெரிகிறது. ஆதலால், இது திடீர் வாபஸ் அல்ல. ஹோண்டா தனது வழக்கமான அணுகுமுறையைப் பின்பற்றினால், அடுத்த தொகுப்பு இந்தியாவிற்கு உறுதி செய்யப்பட்டவுடன் இந்த பைக்குகள் மீண்டும் இணையதளத்தில் பட்டியலிடப்படலாம்.


Click it and Unblock the Notifications









