நம்ம பசங்களுக்கு திறமை ஒன்னும் இல்லாமல் இல்லை... பைக்கை ஓட்டுவதற்கு பெட்ரோல் எல்லாம் தேவையே இல்லை!
நம் இந்தியர்கள் எந்தவொரு தொழிலில் இறங்கினாலும் முழு ஈடுப்பாட்டுடன் செய்வர் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். அதுவும் இன்றைய கால இந்திய இளைஞர்களின் திறமை பல நாடுகளில் பல துறைகளில் மிளிர்கிறது. அப்படியிருக்க, ஆட்டோமொபைல் (Automobile) துறையை மட்டும் இந்திய இளைஞர்கள் விட்டு வைப்பார்களா என்ன...?
நம் இந்திய இளைஞர்கள் தங்களது வீட்டில் அல்லது மெக்கானிக் கடையில் உருவாக்கிய கார் மற்றும் பைக்குகளை பற்றி பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால், அவை எல்லாவற்றையும் விட பிரம்மிக்க வைக்கக் கூடியதாக தற்போது ஒரு இளைஞர் உருவாக்கி உள்ள எலக்ட்ரிக் பைக் (Electric Bike) நம்மை வசீகரிக்கிறது.

வழக்கமான பெட்ரோல் பைக்குகளை உருவாக்குவதை காட்டிலும் தற்போதைய மாடர்ன் தொழிற்நுட்பங்களில் எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவது கொஞ்சம் எளிதான காரியம் தான். இதனால்தான், கடந்த சில வருடங்களில் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் (Start-up Companies) மார்க்கெட்டில் நுழைந்துள்ளன. இருப்பினும், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் எலக்ட்ரிக் பைக் முற்றிலும் விசித்திரமானது ஆகும்.
ஏனெனில், இந்த எலக்ட்ரிக் பைக்கை மற்ற பைக்குகளை போன்று நிமிர்ந்து அமர்ந்தப்படி ஓட்ட முடியாது. மாறாக, இதனை படுத்தப்படி தான் ஓட்ட முடியும். இதனாலேயே இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு நிறைய பேர் எதிர்மறையான கமெண்ட்களை தெரிவித்து இருப்பதை பார்க்க முடிகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த எலக்ட்ரிக் பைக்கில் மொத்தம் 3 சக்கரங்கள் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.

ஆனால், வழக்கமான பைக்குகளை போல இரண்டு சக்கரங்கள் தான் தரையில் படுகிறது. மூன்றாவது சக்கரம் போன்றதான அமைப்பானது பைக்கை இயங்க வைக்கும் எலக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) மற்றும் பேட்டரியை கொண்டதாக உள்ளது. தரையில் படும் சக்கரங்கள் இரண்டும் லாரி சக்கரங்களை போன்று மிகவும் அகலமானதாக இருப்பதை காணலாம்.
பைக்கிற்கான சக்கரங்களையும் இந்த இளைஞரே தனது நண்பர்கள் உடன் சேர்ந்து உருவாக்கி உள்ளார். இன்னும் சொல்லப்போனால், இந்த பைக்கில் முதலாவதாக உருவாக்கப்பட்டது சக்கரங்கள் ஆகும். உருவாக்கப்படும் பைக்கை சற்று உயரத்திற்கு தூக்கி பிடிப்பதற்காக இரும்பு குழாய்களை கொண்டு ஒரு மேடையை உருவாக்கி, அதன்மீது சக்கரங்களையும், பைக்கின் வட்ட வடிவிலான சேசிஸையும் நிறுத்தி பைக்கை கட்டமைத்து உள்ளனர்.

ஏற்கனவே கூறியதுபோல், பைக்கின் அடிப்படை சேசிஸ் (Chassis) ஆனது வட்ட வடிவிலானதாக வடிவமைத்துள்ளது. சேசிஸையும், முன் & பின் சக்கரங்களையும் இணைக்க செவ்வக வடிவில் வலிமையான இரும்பு குழாய்களை பயன்படுத்தி உள்ளனர். வட்ட வடிவிலான சேசிஸில் மொத்தம் மூன்று அடுக்குகளாக பேட்டரிகளை பொருத்தி உள்ளனர். ஆனால், ஒவ்வொரு பேட்டரி செல்களின் திறன் எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓட்டுவதற்கு சற்று அசவுகரியமானதாக இருப்பது போல் தெரிந்தாலும், இந்த எலக்ட்ரிக் பைக்கின் தோற்றம் உண்மையில் பாராட்டத்தக்கது ஆகும். அதுவும், வட்ட வடிவிலான சேசிஸை இதுவரையில் நாங்கள் எங்கும் கேள்விப்பட்டது கிடையாது. பைக்கை உருவாக்கியது மட்டுமின்றி, அதனை இந்த இளைஞர் சாலையில் ஓட்டியும் காண்பித்துள்ளார். இருப்பினும், தான் உருவாக்கிய பைக்கை பொது சாலையில் சோதனை முறையில் ஓட்டிப் பார்க்க இந்த நபர் அரசாங்கத்திடம் இருந்து முறையான அனுமதி பெற்றாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
