ஹோண்டா ஆக்டிவா இ vs ஓலா எஸ்1 ப்ரோ.. ரெண்டு இ-ஸ்கூட்டர்ல எது பெஸ்ட்? சென்னை வாசிகளே இது தெரியாம ஆசப்படாதீங்க!..
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட் நாளுக்கு நாள் விரிவடைந்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (HMSI) அதன் புதிய தயாரிப்பு இ-ஸ்கூட்டர் மாடல்களை சமீபத்தில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டு மின்சார ஸ்கூட்டர் மாடல்களையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆக்டிவா இ: (Activa e:) மற்றும் க்யூசி1 (QC1) ஆகியவையே அவை ஆகும். இந்த பதிவில் நாம் ஹோண்டா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒப்பீட்டு தகவலையேப் பார்க்க இருக்கின்றோம்.
அதாவது, ஹோண்டா அறிமுகம் செய்திருக்கும் ஆக்டிவா இ: மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இ-ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஆகியவற்றை ஒப்பீடு செய்த தகவலையேப் பார்க்க இருக்கின்றோம். இரண்டின் விலை, ரேஞ்ச் திறன் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் ஒப்பீட்டு தகவலையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா ஆக்டிவா இ: விலை vs ஓலா எஸ்1 ப்ரோ விலை: ஹோண்டா நிறுவனம் தன்னுடைய புதிய வரவான ஆக்டிவா இ: ஸ்கூட்டருக்கு ரூ. 1.17 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்த ஸ்கூட்டர் இப்போது இந்தியாவில் மூன்று நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகியவையே அவை ஆகும்.
முதலில் பெங்களூருவிலேயே டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு பின்னரே டெல்லி மற்றும் மும்பையில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் சென்னை அறிமுகம் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இது தெரியாமல் சென்னை வாசிகள் ஆக்டிவா இ-ஸ்கூட்டர் மீது ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
ஆகையால், ஆக்டிவா இ: மாடலின் சென்னை வருகை பற்றிய தகவலை ஹோண்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், ஓலா-வின் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சென்னையிலும் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 1,29,999 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகம். இந்த அதிக விலைக்கு ஏற்ப சிறப்பம்சங்களை மிக தாராளமாக இந்த ஸ்கூட்டர் மாடல் தன்னுள் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஹோண்டா ஆக்டிவா இ: பேட்டரி பேக் - ரேஞ்ச் திறன் vs ஓலா எஸ்1 ப்ரோ பேட்டரி பேக் - ரேஞ்ச் திறன்: ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ: ஸ்கூட்டரில் இரண்டு 1.5 kWh பேட்டரி பேக்குகளை வழங்கி இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 102 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது ஆக்டிவா இ மாடலின் அதிகபட்ச ரேஞ்ச் திறன் ஆகும்.
ஆனால், ஓலா எஸ்1 ப்ரோ இதைவிட மிக மிக அதிக ரேஞ்ச் திறனை வழங்கும். 195 கிமீ தூரம் வரை அது ரேஞ்ச் தரும். இதற்காக 4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 6.5 மணி நேரங்களே போதுமானது. வீட்டில் வைத்து சார்ஜ் செய்கையிலேயே இவ்வளவு அதிகம் நேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் மோட்டார் திறன் vs ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் மோட்டார் திறன்: மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இ-மோட்டாரே ஆக்டிவா இ: ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பிஎம்எஸ்எம் மோட்டார் ஆகும்.
இதன் பீக் பவர் திறன் 6 kW ஆகும். அதேவேளையில், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலோ மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது ஓர் மிட் டிரைவ் ரக ஐபிஎம் மோட்டார் ஆகும். இதன் பீக் பவர் திறன் 11 kW ஆகும்.
ஹோண்டா ஆக்டிவா இ: சிறப்பம்சங்கள் vs ஓலா எஸ்1 ப்ரோ சிறப்பம்சங்கள்: ஆக்டிவா இ: மாடலின் உயர்நிலை தேர்வில் ஆன்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ஓஎஸ் வசதிக் கொண்ட திரை வழங்கப்படுகின்றது. இது ஸ்மார்ட் ஃபோனுக்கு இணையாக செயல்படும். இதற்காக ஹோண்டா ரோடு சிங்க் ட்யூவோ எனும் அம்சத்தையும் வழங்குகின்றது.
இந்த அம்சத்தை பெறுவதற்காக 7 அங்குல டிஎஃப்டி திரையையும் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இத்துடன், சிறந்த ரைடு அனுபவத்திற்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் 3 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஸ்மார்ட் சாவி வசதியும் இத்துடன் வழங்கப்படுகின்றது.
ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இதுபோன்று பலதரப்பட்ட நவீன கால அம்சங்களை நம்மால் காண முடிகின்றது. ட்வின் டெலிஸ்கோபிக், மோனோ ஷாக் ஆகியவை சிறந்த சஸ்பென்ஷனுக்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சைடு ஸ்டாண்டு அலர்ட், ரிவர்ஸ் மோட், ஓடிஏ அப்டேட், மியூசிக், ரிமோட் பூட் அன்லாக், ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு உள்ளிட்டவையும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஞ்ச் மற்றும் திறன் வெளிப்பாட்டில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. அத்துடன், இப்போது நாடு தழுவிய அளவில் இதுவே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த இரண்டு விஷயங்களிலும் ஹோண்டா ஆக்டிவா இ: சற்றே பின் தங்கி இருக்கின்றது. அதேவேளையில், இது சற்றே குறைவான விலையைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதற்காக காத்திருப்பதும் சற்றே ஒர்த்தானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








