ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் தொடங்கியது.. ரூ. 1000 இருந்தா போதும்.. லிஸ்ட்டுல சென்னை இருக்கா!
ஹோண்டா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம், அதன் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு புக்கிங்கை ஏற்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்டிவா இ: (ACTIVA e:) மற்றும் க்யூசி1 (QC1) எனும் இரண்டு மின்சார இரண்டு சக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருந்தது. இந்த இரண்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இவற்றிற்கே அந்நிறுவனம் புக்கிங்கை ஏற்கும் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் டெலிவரி பணிகள் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இரண்டு சக்கர வாகன காதலர்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. புத்தாண்டின் முதல் நாளில் ஆச்சரியப் பரிசு வழங்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் இந்த புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது.

ஆக்டிவா இ: மாடல் ஆக்டிவை தழுவி உருவாக்கப்பட்ட மின்சார வெர்ஷன் ஆகும். அதேவேளையில், க்யூசி1 பார்க்க ஆக்டிவா இ: மாடலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். ஆனால், இரண்டிற்கும் இடையில் கணிசமான வித்தியாசங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை ஹெட்லைட், பக்கவாட்டு பகுதி, இருக்கை மற்றும் கைப் பிடி உள்ளிட்டவற்றில் காண முடியும்.
இந்த வாகனங்களுக்கே தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆனால், இந்தியாவின் முக்கிய சில நகரங்களில் மட்டுமே புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் மட்டுமே புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன.
இதேபோல், க்யூசி1 மாடலுக்கு மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் மட்டுமே புக்கிங் பணிகள் ஏற்கப்படுகின்றன. தமிழகத்தின் ஒரு நகரத்தில்கூட இவற்றிற்கான டெலிவரி பணிகள் தொடங்கப்படவில்லை. இரண்டாம் நகரங்களின் பட்டியலில் சென்னை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆயிரம் ரூபாய் முன் தொகையிலேயே இரண்டிற்கும் புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை ஹோண்டா நிறுவனம் 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025)-இல் வைத்து அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் சவாலான விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக குறைவான விலையில் இது விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதன் முன்னணி இடத்தை தட்டிப் பறிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான நிறுவனங்களின் எண்ணமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே ஹோண்டாவும் ஆக்டிவா இ: மற்றும் க்யூசி1 மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. விரைவிலேயே இவை புக்கிங் மற்றும் விற்பனையில் மாபெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய இளைஞர்கள் எதிர்பார்த்த பல்வேறு சிறப்பம்சங்களுடன் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஆக்டிவா இ: ஓர் முழு சார்ஜில் 102 கிலோ மீட்டர் ரேஞ்சை தரும் திறனையும், க்யூசி1ஓர் முழு சார்ஜில் 80 கிமீ ரேஞ்ச் தரும் திறனையும் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ. 1.10 லட்சத்திற்கும் குறைவான விலையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விரைவிலேயே இதுபற்றிய தகவல்கள் வெளியாக உள்ளன. நிச்சயம் இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








