வந்ததும் தெரியல, போனதும் தெரியல... கடைசிவரை தோல்வியடைந்த பைக்காகவே நடையை கட்டிய ஹோண்டா பைக்!
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா (Honda Motorcycles & Scooters India) நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து 'சிபி300ஆர்' (CB300R) மோட்டார்சைக்கிளை எந்தவொரு அறிவிப்பும் இன்றி அமைதியாக நீக்கியுள்ளது. விற்கப்படாமல் ஸ்டாக்கில் இருக்கும் சிபி300ஆர் பைக்குகள் எதுவும் இல்லை என்றும், இந்த பைக்கிற்கான புதிய முன்பதிவுகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்றும் டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சிபி300ஆர் பைக் முதலில் 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் சிகேடி (Completely Knocked Down) வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால், பைக்கின் பாகங்கள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு முழு பைக்காக அசெம்பிள் செய்யப்படுவதாகும். 2020இல் பிஎஸ்6 தரநிலைகள் நடைமுறைக்கு வந்ததும், ஓராண்டுக்குள் சிபி300ஆர் பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பின்னர், மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிபி300ஆர் பைக் 2022இன் தொடக்கத்தில் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை உள்நாட்டுத் தயாரிப்புப் பாகங்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும், தற்போது மீண்டும் இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சிபி300ஆர் பைக் 286சிசி ஒற்றை சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000rpm-இல் 31.1hp சக்தியையும், 7,500rpm-இல் 27.5Nm டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக இருந்தது. இந்த என்ஜின் பிரபலமான சிபிஆர்250ஆர் பைக்கின் 249சிசி என்ஜினின் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. ஆனால் சிபி300ஆர் பைக்கிற்காக குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவின் 300சிசி பைக்குகள் பிரிவில் இது மிகவும் சக்திவாய்ந்ததாகவோ அல்லது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாகவோ இருக்கவில்லை.

ஆனால் மறுப்பக்கம், முழுமையாக பெட்ரோல் நிரப்பப்பட்ட நிலையிலும் 146 கிலோ எடையுடன், சிபி300ஆர் விரைவான செயல்திறனையும், சிறந்த ஹேண்ட்லிங்கையும் வழங்குகிறது. இதே விலையுள்ள கேடிஎம் (KTM) பைக்கைப் போல ஓட்டும்போது கடினமாக உணராமல், மென்மையான ரைடிங் அனுபவத்தை வழங்கியது. இத்தனை அம்சங்கள் கொண்டிருப்பினும் சிபி300ஆர் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு முக்கிய காரணம், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ரீபெல் 300 (Rebel 300) பைக்கிற்காக இந்த பைக்கின் விற்பனையை ஹோண்டா நிறுத்தி இருக்கலாம்.
ஏனெனில், ஒரே என்ஜின் உடன் கூடிய இரண்டு பைக்குகள் ஒரே விலையில் இருந்தால், அது விற்பனையில் போட்டிக்கு வழிவகுக்கும். ரீபெல் 300 மற்றும் சிபி300ஆர் இரண்டும் ஒரே எஞ்சினைப் பகிர்ந்து கொள்கின்றன; மேலும் இவை சமீபத்திய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாசு உமிழ்வு விதிமுறை காரணங்களுக்காக சிபி300ஆர் நிறுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

சிபி300ஆர் பைக்கை தனது இணையதளத்தில் இருந்து நீக்கியதற்கான எந்தக் காரணத்தையும் ஹோண்டா குறிப்பிடவில்லை. இந்த பைக் எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. சமீப காலங்களில், ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் விலை மற்ற போட்டி நிறுவனங்களின் பைக்குகளுக்கு மிகவும் போட்டியாக இருந்தது. குறிப்பாக ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு, இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.19 லட்சமாக குறைந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல ஆண்டுகளாக அதிக விலையில் இருந்ததால், ஹோண்டா விலையை நியாயமான அளவிற்கு குறைத்த போதிலும், சிபி300ஆர் அதிக வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு சந்தைப்படுத்தாமல், ஹோண்டா நீக்கியதற்கு காரணம் ஏற்கனவே கூறியதுதான், புதிய ரீபெல் 300 பைக்கை கொண்டுவருவது ஆகும்.


Click it and Unblock the Notifications









