சைடு ஸ்டாண்டு தேவைப்படா டூ-வீலரை உருவாக்கிய ஹோண்டா.. அந்த டிராகனுக்கு அப்படியே உயிர் கொடுத்த மாதிரி இருக்கு!
உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), விநோத உருவம் கொண்ட டூ-வீலர் ஒன்றை உருவாக்கி இருக்கின்றது. அதற்கு ஹோண்டா கொரைடன் புராஜெக்ட் (Koraidon Project) எனும் பெயரை அது சூட்டி இருக்கின்றது. போக்கிமான் கம்பெனி (Pokémon Company) உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட ஓர் இரண்டு சக்கர வாகனமே இதுவாகும். மிகவும் தனித்துவமான உருவ அமைப்பை இதற்கு வழங்கி இருக்கின்றனர். இத்துடன், இதை நிறுத்த சைடு-ஸ்டாண்டு தேவைப்படாது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இதற்காக செல்ஃப் பேலன்ஸிங் (Self Balancing Technology) வசதி அந்த டூ-வீலருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. போக்கிமான்-இல் வரும் கதாபாத்திரமான கொரைடன் எனும் மிருகத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த இரண்டு சக்கர வாகனத்தை ஹோண்டா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. கொரைடன் ஓர் டிராகன் ஆகும்.

போக்கிமான்-இல் வரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று ஆகும். இதை பிரதிபலிக்கும் வகையில் உருவம் கொடுக்கப்பட்ட டூ-வீலரையே ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. மேலும், இந்த வாகனத்தை டோக்யோ-வில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அதை காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.
ஹோண்டா வெல்கம் பிளாஸா அவோயமா (Honda Welcome Plaza Aoyama)-விலேயே இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. வருகின்ற மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை அது காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. சென்ற ஆண்டில் டொயோட்டா நிறுவனம் மிரைடான் (Toyota Miraidon) எனும் வாகன இரண்டு சக்கர வாகன மாடலைக் காட்சிப்படுத்தி இருக்கின்றது.
இதைத் தொடர்ந்தே, ஹோண்டா நிறுவனம் இந்த போக்கிமான்-இல் வரும் கொரைடன் வாகனத்தை தயார் செய்திருக்கின்றது. இந்த ஒற்றை வாகனத்தை தயாரிக்க மட்டும் ஹோண்டா நிறுவனத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட எஞ்சினியர்கள் பணியாற்றி இருக்கின்றனர். இவர்களே இந்த வாகனத்தின் தனித்துவமான தோற்றம் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கியிருப்பதற்கு காரணமானவர்கள் ஆவர்.
குறிப்பாக, செல்ஃப் பேலன்ஸிங் வசதி இதில் கொடுக்கப்பட்டு இருப்பது வேற லெவல் சம்பவமாக உள்ளது. இது வழங்கப்பட்டு இருப்பதால் சைடு ஸ்டாண்டு மட்டுமல்ல சென்டர் ஸ்டாண்டுகூட இதற்கு தேவைப்படாது. ஆகையால், இது நகர்ந்து செல்லும்போது கொரைடன் மிருகம் நடந்துச் செல்வதைப் போல தெரியும். இதுபோன்று இன்னும் பல தனித்துவமான வசதிகளை இது தாங்கியிருக்கின்றது.
ஆனால், இந்த வாகனம் பற்றிய இன்னும் முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. விரைவிலேயே அதுபற்றிய விபரங்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. அதேசமயம், ஹோண்டா நிறுவனம் சிறுவர்களைக் கவரும் நோக்கில் முன்மாதிரி மாடலாக மட்டுமே இதை தயார் செய்திருப்பதாகவும், இது விற்பனைக்கு வர சாத்தியமே இல்லை என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்கிமான் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரின் பிரியமான விளையாட்டு ஆகும். இதை தழுவி டிவி ஷோ மற்றும் படங்களும் வந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் வரும் மிக சிறந்த சண்டை வீரர்களில் கொரைடன் டிராகன்-ம் ஒன்றாகும். இதற்கு உயிர் கொடுக்கும் விதமாகவே ஹோண்டா நிறுவனம் இந்த வாகனத்தை தயார் செய்திருக்கின்றது. இது விற்பனைக்கு வருவதற்கான எந்த சாத்திய கூறுகள் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








