அப்ரூவல் கிடைச்சிருச்சு.. ஹோண்டாவின் இந்த இ-பைக் உலக சந்தையில் விற்பனைக்கு வருவது உறுதி.. இந்தியாவிற்கு?..
ஹோண்டா (Honda) நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்வதற்கான ஒப்புதல் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹோண்டா நிறுவனம் எதிர்காலத்திற்காக பலதரப்பட்ட மின்சார இரண்டு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றே டபிள்யூ 8000 டி (WH8000D) மாடல் ஆகும். இதையே உலக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான ஒப்புதல் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் இந்த இ-பைக் உலக நாடுகளில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மின்சார பைக் விற்பனைக்கு வரும்போது இ-வோ எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஸ்டைல் நியோ ரெட்ரோ கஃபே ரேசர் (Neo Retro Cafe Racer) பைக்கைப் போன்று இருக்கின்றது. வட்ட வடிவ ஹெட்லேம்ப், பழைய டூ-வீலர்களில் காணப்படும் ஹெட்லேம்ப் கவுல், வட்ட வடிவ கண்ணாடிகள் (ஹேண்டில் பாரின் நுனியில் இடம் பெற்றிருக்கும்) மற்றும் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை உள்ளிட்டவற்றையே இ-வோ கொண்டிருக்கின்றது.

இ-வோ பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், சில முக்கிய விபரங்கள் மட்டும் இப்போது கசிந்திருக்கின்றன. மிக முக்கியமாக இ-வோ பைக்கில் 8 kW திறன் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இது 11 எச்பி ஆற்றலுக்கு இணையானது என்பது கவனிக்கத்தகுந்தது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஹோண்டாவின் இந்த எலெக்ட்ரிக் பைக் 150 சிசி பெட்ரோல் பைக்கிற்கு இணையான ஆற்றலை உருவாக்கும். இதன் வாயிலாக ஹோண்டா இ-வோ எலெக்ட்ரிக் பைக் வழக்கமான நகர்புற பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை பயன்பாடு என அனைத்திற்குமான ஒன்றாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 110 கிமீ முதல் 120 கிமீ வரை இருக்கும் என்பதும் இப்போது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெற்றிருக்கும் என்றும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், இந்த பைக்கை நீண்ட நேரம் செலவழித்து சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்ய காத்திருக்க வேண்டும் என்கிற சூழல் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரி ஸ்வாப்பிங் மையங்கள் வாயிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை நொடிப் பொழுதில் மாற்றிக் கொண்டு அடுத்தக்கட்ட பயணத்தை இந்த பைக்கில் நாம் தொடரலாம்.
இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளை புதிய ஹோண்டா இ-வோ தன்னுள் தாங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இந்த இ-பைக் பற்றி வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, இது எந்தெந்த நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்கிற விபரமும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். முதலில் ஹோண்டாவின் இந்த மின்சார பைக் ஜப்பானிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் இந்திய வருகை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், ஹோண்டா இ-வோவின் இந்திய வருகை கேள்விக் குறியாகவே உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், ஹோண்டா நிறுவனம் எதிர்காலத்தில் தன்னுடைய இந்த நியோ ரெட்ரோ கஃபே ரேசர் ரக மின்சார பைக்கை இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இப்போது ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ மற்றும் க்யூசி 1 ஆகிய இ-ஸ்கூட்டர் மாடல்களை நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








