தீபாவளி அதுவுமா டெலிவிரி பண்ணி இருக்காங்க! தப்பிச்சு போனாலும் இனி விரட்டி விரட்டி புடிப்பாங்க!
இந்தியாவில் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்கும் நோக்கத்துடன், 2050ஆம் ஆண்டிற்குள் விபத்தில்லா சமூகத்தை உருவாக்கும் ஹோண்டாவின் உலகளாவிய தொலைநோக்கு பார்வையுடன், ஹோண்டா இந்தியா அறக்கட்டளை (HIF) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஹோண்டா குழும நிறுவனங்களின் தனியார் சமூக அக்கறை அமைப்பான HIF, கர்நாடகா மாநில காவல்துறையிடம் 50 சிறப்பு வசதிகளுடன் கூடிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 50 ஹோண்டா சிபி350 பைக்குகளை ஒப்படைத்துள்ளது. இந்த பைக்குகளை 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம் வாகனங்கள்' (QRT) என ஹோண்டா இந்தியா அறக்கட்டளை அழைக்கிறது.

கர்நாடக போலீசாருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டு இருப்பது 'சடக் சஹாயக்: சுரக்ஷித் மார்க், சுரக்ஷித் ஜீவன்' திட்டத்தின் ஒரு பகுதியாகும். HIF-ன் இந்த முயற்சி, சாலை பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பான சாலைகளை உருவாக்குவதும், பொது பாதுகாப்பை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியின் கீழ், HIF நடப்பு 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 300 QRT வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. அண்மையில், குஜராத், சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரிடம் 200 ஹோண்டா QRT வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.

இந்த கூட்டு முயற்சி, சாலை பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் மீள்திறனை மேம்படுத்துவதில் பொது-தனியார் கூட்டாண்மை குறித்த ஹோண்டா இந்தியா அறக்கட்டளையின் தொடர்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான சாலைகள் மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் போக்குவரத்து சூழல் குறித்த பொதுவான இலக்கை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிகழ்வில் கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர். ஜி பரமேஸ்வரா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அரசு உள்துறைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. துஷார் கிரிநாத் (IAS), கர்நாடக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர். எம்.ஏ. சலீம் (IPS), பெங்களூரு காவல் ஆணையர் திரு. சீமந்த் குமார் சிங் (IPS) மற்றும் பெங்களூரு போக்குவரத்து இணை ஆணையர் திரு. கார்த்திக் ரெட்டி (IPS) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

மேலும், கர்நாடக அரசு மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தற்போது கர்நாடகா போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள ஹோண்டா சிபி350 பைக் அடிப்படையிலான இந்த QRT வாகனங்களில் போலீஸ் வாகனங்களுக்கே உண்டான சுழலும் ஒளிரும் விளக்குகள், பொது அறிவிப்பை தெரிவிப்பதற்கான சிஸ்டம், சைரன், டார்ச்லைட், பைக்கின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான ஸ்டோரேஜ் பெட்டிகள், அத்துடன் இரண்டு ஹோண்டா பாதுகாப்பு ஹெல்மெட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த மேம்பாடுகள், அதிக மக்கள் நெருக்கம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காவல்துறையினர் விரைவாக செயல்பட உதவும். அவசர காலத்தில் மற்ற போலீசாருடன் தகவல் தொடர்பை வலுப்படுத்தவும், தங்கள் பொறுப்புகளை திறம்பட மற்றும் பாதுகாப்பாக நிறைவேற்றவும் தேவையான கருவிகள் உடன் காவல்துறையினரின் பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பவர்ஃபுல்லான 350சிசி என்ஜினை கொண்ட சிபி350 பைக்கில் உருவாக்கப்பட்ட இந்த போலீஸ் மோட்டார்சைக்கிள்கள் இயக்கத்தின் போதும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையிலும், விரைவான செயல்பாட்டை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அதிகாரிகள் விரைவாக செல்ல வேண்டிய இடங்களை வேகமாக அடைந்து, உயிர்களைக் காப்பாற்றி, காயங்களைக் குறைத்து, களப்பணியின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications









