வெறும் 90 ஆயிரம் ரூபாய் தான்! பணத்தை எடுத்து வெச்சா அருமையான புதிய ஹோண்டா ஷைன் பைக் கிடைக்கும்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து மிகுந்த வரவேற்புக்கு மத்தியில் விற்பனை செய்யப்படும் பைக்குகளுள் ஒன்று, ஷைன் 125 (Shine 125) ஆகும். இதனாலேயே இந்த பைக்கை அவ்வப்போது அப்டேட் செய்ய ஹோண்டா நிறுவனம் மறப்பது இல்லை. அந்த வகையில், தற்போது ஷைன் 125 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பைக்கில் முக்கியமாக ஒபிடி2பி அப்டேட் (OBD2B Update) கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய 2025 ஹோண்டா ஷைன் 125 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்வதில் ஹீரோ மோட்டோகார்புக்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. மற்ற நிறுவனங்களை போன்று ஹோண்டாவும் தனது 2-வீலர்களை ஒபிடி2பி-க்கு இணக்கமானதாக மாற்றி வருகிறது.

இதன் பயன் என்னவென்றால், 2-வீலரின் என்ஜின் சிஸ்டத்தில் ஏற்படக்கூடிய சிறு சிறு பழுதுகளை கூட முன்னரே கண்டறிந்து அதுகுறித்து எச்சரிக்கும். இதன் மூலமாக, பெரிய என்ஜின் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இத்தகைய அப்டேட் உடன் தான் 2025 ஷைன் 125 பைக் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த அப்டேட் மட்டுமின்றி, வேறு சில புதிய வசதிகளும் புதிய ஷைன் 125 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஷைன் 125 பைக்கிலும் வழக்கமான 123.94சிசி, சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த என்ஜின் தற்போது ஒபிடி2பி-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 10.80 பிஎஸ் மற்றும் 11 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் சிஸ்டத்தில் பல அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இ.எஸ்.பி (eSP)-ஐ சொல்லலாம்.
இது, என்ஜினின் செயல்படுதிறன் மற்றும் எரிபொருள் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், என்ஜின் சிஸ்டத்தில் உள்ள பாகங்களுக்கு இடையேயான உராய்வுகளை குறைத்து அதிர்வுகள் அற்ற மென்மையான பயணத்தை பெற வழிவகுக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. இத்துடன், ஐடியலிங் ஸ்டாப் சிஸ்டம், ஏசிஜி ஸ்டார்ட்டர் போன்ற தொழிற்நுட்பங்களும் என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஷைன் 125 பைக் டிரம், டிஸ்க் என 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும். டிஸ்க் வேரியண்ட்டில் முன் சக்கரத்திற்கு மட்டும் டிஸ்க் பிரேக் கிடைக்கும். டிரம் வேரியண்ட்டில் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் தான் கிடைக்கும். டிரம் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,493 ஆகவும், டிஸ்க் வேரியண்ட்டின் விலை ரூ.89,245 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற நல்ல மைலேஜ் தரக்கூடிய பைக்குகளுள் ஹோண்டா ஷைன் 125 ஒன்றாகும். இத்தகைய பைக் ஒபிடி2பி அப்டேட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். இதனுடன், சேர்த்து யுஎஸ்பி சார்ஜிங் உள்ளிட்டவை புதியதாக வழங்கப்பட்டு இருப்பினும், பைக்கின் விலை ரூ.90 ஆயிரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








