ஹோண்டா கொண்டுவந்த விலை குறைப்பு பற்றி தான் எல்லா பக்கமும் பேச்சு! GST-ஐ குறைச்சது எந்த அளவுக்கு வேலை செய்யுது!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனம், சமீபத்திய ஜிஎஸ்டி (GST) விகித குறைப்பின் முழுப் பலன்களையும் தங்கள் இருசக்கர வாகன வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.
தனிநபர் போக்குவரத்து பிரிவில் வாகனங்களின் விலை குறைப்பு மற்றும் தேவையை அதிகரிக்கும் நோக்கில், இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 28%-இல் இருந்து 18% ஆக (350cc-க்கும் குறைவான என்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்கள்) குறைக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி குறைப்பினால், ஹோண்டா 2-வீலர்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் வாகனத்தைப் பொறுத்து அதிகப்பட்சமாக ரூ.18,887 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் சேமிப்புகளைப் பெறுவார்கள். இந்த விலை குறைப்புகள் ஆக்டிவா (Activa), டியோ (Dio), ஷைன் (Shine), யுனிகார்ன் (Unicorn), ஹார்னெட் (Hornet) மற்றும் சிபி350 (CB350) போன்ற பிரபலமான ஹோண்டா 2-வீலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவா, இந்த ஜிஎஸ்டி குறைப்பால் மிகவும் மலிவானதாக மாறியுள்ளது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் ரூ.8,259 வரையிலும், ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் ரூ.7,874 வரையிலும் சேமிக்க முடியும். இதேபோல், டியோ 110 மற்றும் டியோ 125 ஸ்கூட்டர்களுக்கு முறையே ரூ.7,157 மற்றும் ரூ.8,042 பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் போக்குவரத்துக்கான முதுகெலும்பாக விளங்கும் தினசரி பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்களும் கணிசமான ஜிஎஸ்டி பலன்களைப் பெற்றுள்ளன. ஷைன் 125 பைக்கிற்கு ரூ.7,443, எஸ்பி125 பைக்கிற்கு ரூ.8,447, யுனிகார்ன் மாடலுக்கு ரூ.9,948 வரையிலும் விலை குறைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்போர்ட்டியர் மற்றும் பிரீமியம் தரத்திலான ஹோண்டா பைக்குகளை பொறுத்தவரையில், ஹார்னெட் 2.0 பைக்கின் விலை ரூ.13,026 குறைந்துள்ளது. ஹோண்டா என்.எக்ஸ்200 (NX200) பைக்கிற்கு ரூ.13,978 ஜிஎஸ்டி பலன் கிடைத்துள்ளது. சிபி350 பைக்குகள் வரிசையில் மிக அதிகமான விலை குறைப்புகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

| Model | Maximum GST Benefit (ex-showroom Delhi) |
|---|---|
| Activa 110 | Up to Rs 7,874 |
| Dio 110 | Up to Rs 7,157 |
| Activa 125 | Up to Rs 8,259 |
| Dio 125 | Up to Rs 8,042 |
| Shine 100 | Up to Rs 5,672 |
| Shine 100 DX | Up to Rs 6,256 |
| Livo 110 | Up to Rs 7,165 |
| Shine 125 | Up to Rs 7,443 |
| SP125 | Up to Rs 8,447 |
| CB125 Hornet | Up to Rs 9,229 |
| Unicorn | Up to Rs 9,948 |
| SP160 | Up to Rs 10,635 |
| Hornet 2.0 | Up to Rs 13,026 |
| NX200 | Up to Rs 13,978 |
| CB350 H'ness | Up to Rs 18,598 |
| CB350RS | Up to Rs 18,857 |
| CB350 | Up to Rs 18,887 |
சிபி350 ஹைனெஸ் (H'ness), சிபி350 ஆர்.எஸ் (RS) மற்றும் சிபி350 பைக்குகளின் விலைகள் முறையே ரூ.18,598, ரூ.18,857 மற்றும் ரூ.18,887 வரையில் குறைக்கப்பட்டு உள்ளன. இந்த விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த HMSI-இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குனர் திரு.யோகேஷ் மாத்தூர், "இந்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை வரவேற்கிறோம்.
இந்த நடவடிக்கை ஆனது தனிப்பட்ட போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். இருசக்கர வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு ஒரு சரியான மற்றும் முன்னோக்கிய நடவடிக்கையாகும், இது வாகனங்களை மேலும் மலிவானதாக்கி ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை வலுப்படுத்துகிறது" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த பலனை முழுமையாக வழங்குவதில் HMSI உறுதியாக உள்ளது. பண்டிகைக் காலம் நெருங்குவதால், இந்த நடவடிக்கை நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்களை பெற உதவும். இந்த விலை குறைப்பு ஆனது வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதுடன், டீலர்கள் (Dealers), சப்ளையர்கள் (Suppliers) மற்றும் உள்ளூர் வணிகங்கள் என முழு சங்கிலியையும் வலுப்படுத்துகிறது.
ஒரே நேரத்தில், எங்கள் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களிலும் புதிய 40% ஜிஎஸ்டி தாக்கம் குறித்து நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம். மேம்பட்ட மற்றும் நம்பகமான வாகனங்களை வழங்குவதில் HMSI தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தொழில்துறை மற்றும் அதன் நுகர்வோருக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்" என தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: HMSI தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள்களில் புதிய 40% ஜிஎஸ்டி தாக்கத்தை மதிப்பீடு செய்து வருவதாக கூறியுள்ளதால், இந்தியாவில் ஹோண்டாவின் விலையுயர்ந்த பைக்குகளின் விலைகள் குறைக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த விலை குறைப்புகள் மூலம், ஸ்கூட்டர் மற்றும் தினசரி மோட்டார்சைக்கிள்கள் பிரிவுகளில் தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும், நடுத்தர மற்றும் பிரீமியம் பைக்குகள் பிரிவில் வளர்ச்சியை மேம்படுத்தவும் HMSI நோக்கமாக கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









