ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியா வந்தது... ஹோண்டாவில் இப்போது ஆள் அட்ரஸே காணோம்!
ஹோண்டா டூ வீலர்ஸ் (Honda Two Wheelers), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தில் இருந்து பல விலை குறைவான பைக் & ஸ்கூட்டர்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக விலைமிக்க பைக்குகளும் ஹோண்டாவில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் (CB350RS) ஆகும். இந்த பைக்கை புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் பைக்கில் புதிய அப்டேட்களாக பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்களில் கிராஃபிக்ஸ் (Graphics)-இல் சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்துடன், ரீபெல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் என 2 புதிய கலர் ஆப்ஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மார்க்கெட்டில் தற்சமயம் டி.எல்.எக்ஸ் (DLX) மற்றும் டி.எல்.எக்ஸ் புரோ (DLX Pro) என 2 விதமான வேரியண்ட்களில் ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் பைக் விற்பனை செய்யப்படுகிறது. இதில், டி.எல்.எக்ஸ் புரோ வேரியண்ட்டிற்கு மட்டுமே புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கலர் ஆப்ஷன்களில் ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் பைக்கின் விலைகள் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை.
ஆனால், அதற்குள் புதிய நிறங்களில் சிபி350ஆர் பைக்குகள் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளன. அதை வைத்துதான், இந்த பைக்கை ஹோண்டா அப்டேட் செய்துள்ளதாக நாங்கள் கூறுகிறோம். ஹோண்டா சிபி350 ஆர்.எஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2.16 லட்சத்தில் இருந்து ரூ.2.19 லட்சம் வரையில் உள்ளன.
புதிய கலர் ஆப்ஷன்களின் வருகைக்கு முன்பு வரையில், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் பேர்ல் இக்னியஸ் பிளாக் மஞ்சள் என 2 கலர் ஆப்ஷன்களில் மட்டுமே சிபி350 ஆர்.எஸ் பைக்கின் டி.எல்.எக்ஸ் புரோ வேரியண்ட் கிடைத்துவந்தது. மறுப்பக்கம், டி.எல்.எக்ஸ் வேரியண்ட் பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் பேர்ல் இக்னியஸ் பிளாக் கலர் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. இதற்கு புதிய கலர் ஆப்ஷன்கள் எதுவும் 2025 அப்டேட்டாக வழங்கப்படவில்லை.

சிபி350 ஆர்.எஸ் பைக்கின் இந்த இரு வேரியண்ட்களுக்கு இடையேயான வித்தியாசம் என்னவென்றால், ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் (HSVCS) ஆகும். அதாவது, இது டி.எல்.எக்ஸ் புரோ வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். ஆனால், இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 348.36சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 20.8 பிஎச்பி மற்றும் 3,000 ஆர்பிஎம்-இல் 30 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் சிஸ்டத்தில் கஷ்டமில்லாத கியர் மாற்றத்திற்காக ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களாக டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் மற்றும் அவசர கால ஸ்டாப் சிக்னல் வசதிகள் வழங்கப்படுகின்றன.
இதில், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் ஆனது பைக்கிற்கு டிராக்ஷன் கண்ட்ரோலாக செயல்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு இந்த ஹோண்டா பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் வாயு மூலமாக செயல்படக்கூடிய ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன. பிரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா கொண்டுவந்த பைக் தான் சிபி350 மற்றும் சிபி350 ஆர்.எஸ் ஆகும். ஆனால், இவை இரண்டின் விற்பனையும் பெரிய அளவில் சிறப்பாக இல்லை. புதிய கலர் ஆப்ஷன்களின் அறிமுகத்திற்கு பிறகாவது சிபி350 ஆர்.எஸ் பைக்கின் விற்பனை அதிகரிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








