ஸ்பிளெண்டர் சகாப்தம் முடிகிறது? களத்திற்கு வருகிறது ஹோண்டாவின் விலை குறைவான புதிய பைக்!
இந்தியாவில் அதிக இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இருப்பினும் இன்னமும் 100-110 சிசி பைக்குகளின் விற்பனை சிறப்பாகவே உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பைக்குகளில், 46 சதவீதத்திற்கும் மேற்பட்ட பைக்குகள், 100-110 சிசி செக்மெண்ட்டை சேர்ந்தவை ஆகும்.
இந்த 100-110 சிசி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotorCorp) நிறுவனம் ஆகும். இந்த செக்மெண்ட்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சந்தை பங்கு (Market Share) 78 சதவீதம் ஆகும். ஆனால் இந்த செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனத்தின் சந்தை பங்கு மிகவும் குறைவு.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் 125 சிசி பைக் செக்மெண்ட் மற்றும் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் மிகவும் வலிமையாக இருக்கிறது. ஆனால் 100-110 சிசி செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனத்தின் சந்தை பங்கு வெறும் 6 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. இதனால் இந்த செக்மெண்ட்டில் புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள புதிய பைக்கில் 100 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த புதிய பைக் ஏராளமான வசதிகள் நிரம்பியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஹீரோ பேஷன் ப்ளஸ் (Hero Passion Plus), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மற்றும் ஹீரோ ஹெச்எஃப் 100 (Hero HF 100) ஆகிய 100 சிசி பைக்குகளுக்கு எல்லாம் ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100 சிசி பைக் விற்பனையில் போட்டியை வழங்கும். அத்துடன் 100 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) வரிசை பைக்குகளுக்கும் இது விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
100 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பைக் என்பதால், ஓரளவிற்கு குறைவான விலையில் இதை நாம் எதிர்பார்க்க முடியும். அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்திலோ ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த புதிய 100 சிசி பைக் தவிர, ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) பைக்கின் புதிய வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வரும் காலங்களில் 100-110 சிசி செக்மெண்ட்டில் ஹோண்டா நிறுவனத்தின் சந்தை பங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100 சிசி பைக்கின் வருகை, இந்தியாவின் 100-110 சிசி பைக் செக்மெண்ட்டில், ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய 2 நிறுவனங்கள் இடையேயான போட்டியை இன்னும் கடுமையாக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
குறிப்பு: இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா ஷைன் 100 பைக்கின் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








