1 லட்ச ரூபாய் தான் உங்க பட்ஜெட்டா? எல்லாரும் வாங்கும் பைக்குகளில் இந்த ஐந்தை மட்டும் பாருங்க போதும்!!
உலகளவில் அதிக எண்ணிக்கையில் பைக்குகள் விற்பனை செய்யப்படும் நாடுகளுள் நமது இந்தியா முன்னிலையில் உள்ளது. அந்த அளவிற்கு நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் மட்டும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் மக்களால் வாங்கப்படுகிறது.
ஸ்பிளெண்டர் பைக் உள்பட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மற்ற பைக்குகள் விற்பனையும் மிக சிறப்பாகவே உள்ளது. அதேபோல், ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் போன்ற மற்ற முன்னணி பைக் நிறுவனங்களும் பைக் விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப குறைந்த விலையிலான பைக்குகள் இந்த நிறுவனங்களில் இருந்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவது ஆகும்.

ரூ.1 லட்சம் இருந்தாலே போதும் நல்ல தரமான பைக்கை மேற்கூறப்பட்ட பிராண்ட்களுள் ஒன்றில் இருந்து வாங்கலாம். ஆனால் எதை வாங்குவது என்பதில் நம்மில் நிறைய பேருக்கு பெரும் குழப்பம் உள்ளது. அத்தகையவர்களுக்காகவே இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் 5 மோட்டார்சைக்கிள்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இவை அனைத்தும் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான எடை கொண்டவைகளாக விளங்குகின்றன.
டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125): டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் தோற்றத்திலான 125சிசி பைக் ஆகும். பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ரைடர் 125 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.90,000இல் இருந்து ரூ.1,02,000 வரையில் உள்ளன.

டிஜிட்டல் ரிவர்ஸ்-எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ரைடு மோட்கள் உள்ளிட்டவற்றை பெறும் இந்த டிவிஎஸ் பைக்கில் 124.8சிசி, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. 2 மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட ரைடர் 125 பைக்கின் எடை ஆனது 123 கிலோ ஆகும். 10 லிட்டர்கள் கொள்ளளவில் இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது.
பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125): இந்திய சந்தையில் நீண்ட வருடங்களாக இருக்கும் பைக்குகளுள் இந்த பல்சர் பைக்கும் ஒன்றாகும். இதனாலேயே கொஞ்சம் பழமையான தோற்றத்தை கொண்டிருக்கும் பல்சர் 125 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. பல்சர் 125 பைக்கில் 124.4சிசி ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ப்ளூடூத் கனெட்டிவிட்டி வசதி உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டெலெஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் அடையாளமான ஓநாய்-கண் வடிவிலான ஹெட்லைட் உள்ளிட்டவற்றை பெறுகின்ற பலசர் 125 பைக்கின் நீளம் ஆனது மேலே கூறப்பட்ட டிவிஎஸ் பைக்கை காட்டிலும் 1.5 செமீ குறைவாக உள்ளது. ஆனால், இந்த 125சிசி பல்சர் பைக்கின் எடை ஆனது 140 கிலோ ஆகும். பெட்ரோல் டேங்கும் சற்று பெரியதாக 11.5 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படுகிறது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R): டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்டைலிஷான 125சிசி பைக் எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஆகும். டிவிஎஸ் பைக் உடனான இந்த போட்டியில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் 125சிசி பைக்காக எக்ஸ்ட்ரீம் 125ஆர் விளங்குகிறது.

இந்த பைக்கின் ஐபிஎஸ் (IBS) வேரியண்ட் ரூ.96,425 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஏபிஎஸ் (ABS) வேரியண்ட் ரூ.1,00,100 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஆனது சிறந்த மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது. இந்த பைக்கில் பொருத்தப்படும் 125சிசி ஏர்-கூல்டு என்ஜின் ஆனது 60கிமீ-க்கும் அதிகமான மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.
ஹோண்டா எஸ்பி125 (Honda SP125): பல்சர் 125 பைக்கை போன்று மார்க்கெட்டில் நீண்ட வருடங்களாக இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய பைக்காக எஸ்பி125 உள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஹோண்டா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.94 ஆயிரம் வரையில் உள்ளன.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை பெறும் எஸ்பி125 பைக்கின் நீளம் 2,020மிமீ ஆகும். 116 கிலோவில் எடை குறைவான பைக்காக விளங்கும் இந்த ஹோண்டா 125சிசி பைக்கில் 11.2 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus): ஸ்பிளெண்டர் பைக்குகளுக்கு இந்தியாவில் அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படும் ஸ்பிளெண்டர் பைக்குகளுள் 'ஸ்பிளெண்டர் பிளஸ்' ஒன்றாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.77 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் வரையில் உள்ளன.

இந்த பைக்கில் 97.2சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு சுமார் 70கிமீ வரையிலான மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது. ஐபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், ட்யூப்லெஸ் டயர்கள், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவை ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கின் விலைகளாக மேற்கூறப்பட்டுள்ளவை எல்லாம் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் கொஞ்சம் அதிகமாக வரும் என்றாலும், ஏறக்குறைய ரூ.1 லட்சம் என்கிற அளவிலேயே இருக்கும். மேலும், இந்த விலை குறைவான பைக்குகளில் மைலேஜும் அதிகமாக கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், இவை கொடுக்கும் பணத்திற்கு ஏற்றவை ஆக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
மேற்கூறப்பட்ட பைக்குகளுள் கடைசியாக பார்த்த ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மட்டும் 100சிசி என்ஜினை கொண்ட பைக் ஆகும். மற்றவை அனைத்தும் 125சிசி என்ஜினை கொண்டவை ஆகும். பைக்கை நகரத்திற்குள் மட்டுமே பயன்படுத்த போகிறீர்கள் எனில் 100சிசி என்ஜினே போதுமானது; அதுவே அவ்வப்போது வெளியூர்களுக்கு எடுத்து செல்வீர்கள் என்றால் 125சிசி பைக்கை வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









