ராயல் என்ஃபீல்டை தோற்கடிக்க இனி ஒரு கம்பெனி பொறந்துதான் வரணும்!! சென்னையில் தொழிற்சாலை மட்டும் இல்லைனா...?
உலகின் மிக பெரும் மோட்டார்சைக்கிள் சந்தை நம் இந்தியா என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் அதேநேரம், நம் நாட்டில் விலை குறைவான பைக்குகளை வாங்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஏனெனில், அவ்வாறான பொருளாதார சூழலே நம் நாட்டில் நிலவுகிறது. 500சிசி-க்கு மேல் பவர்ஃபுல்லான மற்றும் விலைமிக்க பைக்குகளை வாங்கக்கூடிய கஸ்டமர்கள் பரந்து விரிந்த இந்திய நாட்டில் குறைவாகவே உள்ளனர். அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 500சிசி-க்கும் மேல் பவர்ஃபுல்லான பைக்குகள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் விலையுயர்ந்த பைக்குகளை வாங்க அதிக கஸ்டமர்கள் இல்லாவிடினும், சுமார் 40 விதமான விலையுயர்ந்த பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த 40 பைக்குகளும் 500சிசி-க்கும் அதிகமான சிசி என்ஜினை கொண்ட பவர்ஃபுல்லான மற்றும் விலைமிக்க பைக்குகள் ஆகும்.

இவை மொத்தமாக, கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் 4 ஆயிரத்து 729 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த பிப்ரவரியில் 500சிசி-க்கும் அதிகமான பவர்ஃபுல்லான 4,729 பைக்குகள் கடந்த பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி மாதத்தில் 3 ஆயிரத்து 497 500சிசி+ பைக்குகள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 1,232 500சிசி+ பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய விலையுயர்ந்த பைக்குகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்வதில் வழக்கம்போல் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield)-இன் கை தான் ஓங்கியுள்ளது. ஏனெனில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து 650சிசி பைக்குகள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டில் இருந்து தற்சமயம் 4 விதமான 650சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், இண்டர்செப்டர் 650 (Interceptor 650) மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 (Continental GT650) ஆனது 650 ட்வின்ஸ் (650 Twins) என அழைக்கப்படுகின்றன. இந்த 650 ட்வின்ஸ் பைக்குகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,882 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதுவே, 2024 பிப்ரவரியில் 2,070 650-ட்வின்ஸ் பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, இந்த 650சிசி பைக்குகள் விற்பனை ஆனது 39.23%, அதாவது 812 யூனிட்கள் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாத விற்பனை நிலவரப்படி பார்க்கும்போது, இந்தியாவில் 500சிசி-க்கு மேல் பவர்ஃபுல்லான பைக்கை வாங்கும் 3இல் இருவர் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளுள் ஒன்றை வாங்குகின்றனர்.

இந்த வரிசையில் முதலிடத்தை 650 ட்வின்ஸ் பிடித்திருக்கும் நிலையில், 2வது இடத்திலும் ராயல் என்ஃபீல்டின் மற்றொரு 650சிசி பைக்கான சூப்பர் மீட்டியோர் (Super Meteor) உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1,183 சூப்பர் மீட்டியோர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதுவே 2024 பிப்ரவரியில் இதனை காட்டிலும் 110 பைக்குகள் குறைவாக 1,073 சூப்பர் மீட்டியோர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இவை மட்டுமின்றி, ஷாட்கன் (Shotgun) என்கிற 650சிசி பைக் ஒன்றையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ள ஷாட்கன் மோட்டார்சைக்கிள் ஆனது கடந்த பிப்ரவரி மாதத்தில் 264 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு ஷாட்கன் பைக் கூட விற்பனையாகவில்லை.

ஏனெனில், 2024 ஜனவரி மாதத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் டெலிவிரிகள் 2024 மார்ச் மாதத்தில் இருந்துதான் துவங்கப்பட்டன. இந்த லிஸ்ட்டில், 2வது இடத்தில் உள்ள சூப்பர் மீட்டியோருக்கும், 3வது இடத்தில் உள்ள ஷாட்கனுக்கும் மிக பெரிய வித்தியாசம் இருப்பதை காணலாம்.
வெறும் 264 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள ஷாட்கன் இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது என்றால், இதற்கு அடுத்துள்ள 500சிசி+ பைக்குகள் இந்த 264 யூனிட்கள் கூட விற்பனை செய்யப்படவில்லை என அர்த்தம் ஆகும். இந்த வரிசையில் 4வது இடத்தில் ஹோண்டா 2-வீலர்ஸின் சிபிஆர் 650 உள்ளது. 500சிசி-க்கு மேலான பைக்குகளை விற்பனை செய்வதில் ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த இடத்தில் ஹோண்டா 2-வீலர்ஸ் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா சிபிஆர்650 பைக்குகளின் எண்ணிக்கை 128 ஆகும். 2024 பிப்ரவரியில் ஒரு சிபிஆர்650 பைக் கூட விற்பனை செய்யப்படவில்லை. சுஸுகி ஹயபுஸா இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 55 ஹயபுஸா பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை வெறும் 28 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.
இதற்கடுத்து 6வது இடத்தில் டிரையம்ப்பின் ஸ்ட்ரீட் டிரிபிள் பைக் ஆனது 43 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இதற்கடுத்து 7வது, 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே கவாஸாகி நிறுவனத்தின் இசட்.எக்ஸ்-6ஆர், இசட்900, நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் மற்றும் நிஞ்சா 1100எஸ்.எக்ஸ் பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 20, 19, 14 மற்றும் 14 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் டாப்-10 இடங்களை பிடித்த முதல் 10 500சிசி+ பைக்குகளை மட்டுமே பார்த்துள்ளோம். இவை இல்லாமல் இன்னும் பல 500சிசி+ பைக்குகள் பல்வேறு பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. 2024 பிப்ரவரியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட சில 500சிசி+ பைக்குகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்.எஸ் பைக் 2024 பிப்ரவரியில் 29 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2025 பிப்ரவரியில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை. அதேபோல், 2024 பிப்ரவரியில் 18 யூனிட்கள் விற்பனையாகி இருந்த கவாஸாகி வெர்சஸ் 650 பைக் ஆனது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 3 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









