ஏரியாவுக்கு ஒருத்தர் ஒவ்வொரு மாதமும் ஆக்டிவாவை வாங்குறாங்க! 2வது இடத்தில் உள்ள ஸ்கூட்டர் என்ன தெரியுமா?
உலகில் அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர்கள் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான ஸ்கூட்டர்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இது கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 2 ஸ்கூட்டர்கள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த இரு ஸ்கூட்டர்கள் என்னென்ன என்பதையும், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycles & Scooters India) நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளன. ஹீரோ நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு ஸ்பிளெண்டர் (Splendor) பைக் முக்கிய காரணமாக விளங்குகிறது.

அதேபோல், ஹோண்டா நிறுவனத்துக்கு ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர் மிக முக்கியமான தயாரிப்பாக விளங்குகிறது. ஏனெனில், இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக கடந்த பல வருடங்களாக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது. ஒவ்வொரு மாதத்திலும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.
இருப்பினும், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் ஸ்கூட்டர் பட்டத்தை ஆக்டிவா விடவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 787 ஆகும். அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரத்து 300 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

இந்த வகையில் பார்த்தால், ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை ஆனது 25.17% குறைந்துள்ளது. அதாவது 65 ஆயிரத்து 513 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆக்டிவாவிற்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தை வழக்கம்போல் டிவிஎஸ் மோட்டார்ஸின் பிரபலமான ஜூபிட்டர் (Jupiter) ஸ்கூட்டர் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 588 ஆகும்.
ஆனால், 2024 ஏப்ரலில் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை தொடவில்லை. வெறும் 77 ஆயிரத்து 86 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 33.08% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்தில் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர் 65 ஆயிரத்து 107 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

2024 ஏப்ரலிலும் கிட்டத்தட்ட இதற்கு இணையாக 61 ஆயிரத்து 960 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், துல்லியமாக பார்க்கும்போது, ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆனது 5.08% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு அடுத்து இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் இரு டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் உள்ளன.
இதில் 4வது இடத்தை ஐக்யூப் என்கிற டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. 5வது இடத்தில் டிவிஎஸ் எண்டார்க் உள்ளது. இவை இரண்டின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 27,604 மற்றும் 25,383 ஆகும். 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள சுஸுகி பர்க்மேன் மற்றும் ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 23,050 மற்றும் 20,555 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் முறையே ஓலா எஸ்1 (19,709), பஜாஜ் சேத்தக் (19,216) மற்றும் யமஹா ரே இசட்.ஆர் (14,183) உள்ளன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை யார் அதிகம் விற்பனை செய்வது என்கிற போட்டி டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஓலா நிறுவனங்களிடையே உள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னிலை வகித்து இருப்பது டிவிஎஸ் மோட்டார் ஆகும்.


Click it and Unblock the Notifications









