ஹோண்டா ஆக்டிவா என்கிற ஒரேயொரு ஸ்கூட்டர்தான்... மற்ற ஸ்கூட்டர்ஸ் எல்லாமே குளோஸ்!!
என்னதான் புதியது புதியதாக ஸ்கூட்டர்கள் வந்தாலும், நம் இந்திய மக்களுக்கு கியர்களை கொண்ட பைக்குகள் என்றால்தான் எப்போதுமே ஆர்வம் அதிகம் ஆகும். இருப்பினும், அதேநேரம் ஸ்கூட்டர்களை வாங்குவோரும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அதாவது, அந்த அளவிற்கு நம் இந்தியா ஆனது மிக பெரிய 2-வீலர் சந்தையாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் ஸ்கூட்டர் மாடல் ஒன்று கிட்டத்தட்ட 2 லட்சம் யூனிட்களும், மற்றொரு ஸ்கூட்டர் மாடல் கிட்டத்தட்ட 1 லட்ச யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன? என்பதையும், கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்களை பற்றியும் இனி பார்க்கலாம், வாங்க.
நடந்து முடிந்த கடந்த 2025 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர்களின் ஒட்டுமொத்த விற்பனையை கூட்டினாலே கிட்டத்தட்ட 5.50 லட்சம் வந்து விடுகிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், டாப்-10 ஸ்கூட்டர்கள் மட்டுமே 5 லட்சத்து 49 ஆயிரத்து 157 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் இதே 10 ஸ்கூட்டர்கள் சற்று குறைவாக 5 லட்சத்து 42 ஆயிரத்து 874 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 713 ஆகும். ஆனால், உண்மையில் 2024 மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 25 ஆயிரத்து 639 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அந்த மாதத்தில் சுமார் 2 லட்சத்து 16 ஆயிரத்து 352 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

ஹோண்டாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter) உள்ளது. அதாவது, ஆக்டிவாவுக்கு அடுத்து மக்கள் அதிகம் பேர் வாங்கக்கூடிய ஸ்கூட்டராக விளங்கும் ஜூபிட்டர் கடந்த மே மாதத்தில் கிட்டத்தட்ட 1 லட்ச யூனிட்களுக்கு இணையாக 97 ஆயிரத்து 606 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதுவே, 2024 மே மாதத்தில் வெறும் 75 ஆயிரத்து 838 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 3வது இடத்தில் உள்ள சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர் ஆனது டிவிஎஸ் ஜூபிட்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கு நேரெதிர் போட்டியாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில் 75 ஆயிரத்து 778 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2024 மே மாதத்தில் 64 ஆயிரத்து 812 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் டிவிஎஸ் எக்ஸ்.எல் மற்றும் ஐக்யூப் ஸ்கூட்டர்கள் உள்ளன. இதில், எக்ஸ்.எல் ஆனது மினி பைக்காக இருப்பினும், அதனை ஸ்கூட்டர் கணக்கில் சேர்க்கலாம். கடந்த மே மாதத்தில் இந்த டிவிஎஸ் தயாரிப்புகள் முறையே 37,264 மற்றும் 27,642 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில், டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2024 மே மாதத்தில் வெறும் 17 ஆயிரத்து 230 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. 6வது இடத்தில் ஹோண்டா டியோ 26 ஆயிரத்து 220 யூனிட்கள் விற்பனை உடனும், 7வது இடத்தில் பஜாஜ் சேத்தக் 25,540 யூனிட்கள் விற்பனை உடனும் உள்ளன. இந்த டாப்-10 ஸ்கூட்டர்ஸ் லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் டிவிஎஸ் என்டார்க் (25,205), பர்க்மேன் (24,688) மற்றும் ஓலா எஸ்1 (18,501) ஸ்கூட்டர்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவாவின் ஆதிக்கத்தை உடைக்க இதுக்கு அப்புறம்தான் எதாவது ஸ்கூட்டர் பிறக்க வேண்டும். அந்த அளவிற்கு ஆதிக்கத்தை செலுத்திவரும் ஆக்டிவாவுக்கும், 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜூபிட்டருக்கும் விற்பனை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 1 லட்சம் யூனிட்கள் வித்தியாசம் உள்ளதை காணலாம்.


Click it and Unblock the Notifications









