ராயல் என்ஃபீல்டு பைக் எல்லாம் கூட இப்போ இப்படி கிடைக்குறது கிடையாது! விலையை கேட்டால தான் கொஞ்சம் மயக்கம் வருது
ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motorcycles), இந்தியாவில் 50, 60 வருடங்களுக்கு முன்பே மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்த பழமையான நிறுவனம். இடையில் பெரிய இடைவெளியை விட்ட இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த சில வருடங்களாக தீவிரமாக உள்ளன. புதியது, புதியதாக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து ஜாவா தனக்கென ஒரு கஸ்டமர் கட்டமைப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட பைக் தான், ஜாவா 350 ஆகும்.
350சிசி என்ஜின் உடன் பழமையான கிளாசிக் தோற்றத்திலான பைக்குகளின் விற்பனையில் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அதற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டதே ஜாவா 350 ஆகும். இந்த நிலையில், ஜாவா 350 பைக் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடம் நிறைவடைந்ததை நினைவுக்கூறும் விதமாக புதிய ஸ்பெஷல் எடிசன் (Special Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜாவா 350 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனுக்கு 'லீகசி எடிசன்' (Legacy Edition) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை வாங்க இப்போதே அதனை புக் செய்வது நல்லது. ஏனெனில், புதிய ஜாவா 350 லீகசி எடிசனை வெறும் 500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய போவதாக ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்க்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கமான ஜாவா 350 பைக்கில் இருந்து வேறுப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக புதிய லீகசி எடிசனில் சில பிரத்யேகமான பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, டூரிங் விஸர் (Touring Visor) ஆகும். இது எதிர்காற்றை தடுத்து முகத்தில் தூசிகள் படிவதை தடுப்பதுடன், பைக்கின் ஏரோடைனாமிக்ஸ் தன்மையையும் மேம்படுத்தும்.
இதனுடன், ஜாவா 350 லீகசி எடிசனில் வழங்கப்பட்டுள்ள பில்லன் பேக்ரெஸ்ட் (Pillion Backrest) ஆனது பின் இருக்கையில் அமர்பவரின் முதுகிற்கு குஷினாக இருக்கும். மேலும், பிரீமியம் தரத்தில் கிராஷ் கார்ட் (Crash Guard)-உம் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிராஷ் கார்ட் ஆனது பைக் கீழே விழும்போது பயணிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதுடன், பைக்கில் சேதாரங்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

இவற்றுடன், லெதர் கீ செயின் மற்றும் சிறிய அளவில் பைக்கின் உருவ பொம்மையும் இந்த பைக் உடன் கிடைக்கும். மற்றப்படி, என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஜாவா 350 பைக்கில் பொருத்தப்படும் 350சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 22.5 பிஎஸ் மற்றும் 28.1 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் சிஸ்டத்துடன் வழங்கப்படும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் ஆனது மென்மையான கியர் மாற்றத்துக்கு உதவக்கூடியது ஆகும். மேலும் இந்த என்ஜின் சிஸ்டத்தில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றுடன், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. புதிய ஜாவா 350 லீகசி எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,98,950ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா பைக்குகளுக்கு இந்தியாவில் மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருவதினால், ஜாவா 350 பைக்கில் புதிய லீகசி எடிசன் என்கிற ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்வதற்கு இது சரியான நேரமே ஆகும். இது, ஜாவா பைக்குகளின் விற்பனையை மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








