கவாஸாகி பைக் வாங்க ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கீங்களா? குறைந்த விலையில் உங்களுக்காகவே புது பைக் அறிமுகம்!!
கவாஸாகி (Kawasaki) நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது புது, புது பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். சமீப காலமாக விலை குறைவான பைக்குகளை இந்தியாவில் களமிறக்குவதில் கவாஸாகி நிறுவனம் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக மீண்டும் ஒரு விலை குறைவான கவாஸாகி பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர், 'வெர்ஸஸ்-எக்ஸ் 300' (Versys-X 300) ஆகும். இந்த 300சிசி கவாஸாகி பைக் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்தது. அதன்பின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கவாஸாகி வெர்ஸஸ்-எக்ஸ் 300 ஆனது அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். அதாவது, கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு இந்த பைக்கை தைரியமாக கொண்டு செல்லலாம். அதற்கேற்ப இந்த பைக்கில், சக்கரங்களுக்கும் பைக்கின் உடலுக்கும் அதிக இடைவெளி உள்ளது. விலை குறைவான பைக் என கூறப்பட்டாலும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.80 லட்சம் ஆகும்.

இந்தியாவில் விற்பனையில் உள்ள மற்ற கவாஸாகி பைக்குகள் உடன் ஒப்பிடுகையில் குறைவான விலையை கொண்டது என்பதால், விலை குறைவான பைக் எனப்படுகிறது. மேலும், மேலே கூறப்பட்ட ரூ.3.80 லட்சம் ஆனது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.
இந்தியாவில் இதனை காட்டிலும் விலைமிக்க பைக்குகளை கவாஸாகி விற்பனை செய்கிறது. அவற்றுடன் ஒப்பிடுகையில், வெர்ஸஸ்-எக்ஸ் 300 ஆனது எண்ட்ரீ-லெவல் அட்வென்ச்சர் பைக் ஆகும். விலை குறைவான அட்வென்ச்சர் பைக் என்றாலும், ரூ.3.80 லட்சத்தில் விலை கொண்டதற்கு ஏற்ப வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்கை சுற்றிலும் நிறைய பிரீமியம் தரத்திலான ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கவாஸாகியின் மற்ற வெர்ஸஸ் பைக்குகளின் டிஎன்ஏ-இல் புதிய வெர்ஸஸ்-எக்ஸ் 300 உருவாக்கப்பட்டுள்ளது. வெர்ஸஸ் பைக்குகள் மட்டுமின்றி, மற்ற கவாஸாகி பைக்குகளில் இருந்தும் சில அம்சங்களை பெற்று புதிய வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிஞ்சா 300 (Ninja 300) பைக்கில் பொருத்தப்படும் அதே 296சிசி, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகப்பட்சமாக 11,500 ஆர்பிஎம்-இல் 38.5 பிஎச்பி மற்றும் 10,000 ஆர்பிஎம்-இல் 26.1 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச்சும் இந்த பைக்கில் உள்ளது. அட்வென்ச்சர் பைக் என்பதால், வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்கில் முன் சக்கரம் 19 இன்ச்சில் நன்கு பெரியதாக வழங்கப்படுகிறது.

அதேநேரம் பின்சக்கரம் 17 இன்ச்சில் அளவில் சற்று சிறியதாக உள்ளது. மேலும், அட்வென்சர் ஸ்டைல் பைக் என்பதால், அலாய் சக்கரங்களுக்கு பதிலாக வயர்-ஸ்போக் சக்கரங்கள் வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், இன்றைய கால மாடர்ன் பைக்குகளை போன்று ட்யூப்லெஸ் டயர்கள் இந்த கவாஸாகி பைக்கின் சக்கரங்களில் வழங்கப்படாமல், ட்யூப் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
184 கிலோ எடை கொண்ட புதிய வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்கில் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி 180மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. விற்பனையில் இந்த புதிய கவாஸாகி வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure) பைக்குகள் விற்பனையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதால், வெர்ஸஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கு கணிசமான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் கிடைப்பர் என எதிர்பார்க்கிறோம். மேற்கூறப்பட்ட போட்டி பைக்குகள் உடன் ஒப்பிடுகையில், ரூ.1 லட்சம் வரையில் விலை குறைவானதாக புதிய கவாஸாகி வெர்ஸஸ்-எக்ஸ் 300 விளங்குகிறது. ஆனால், அதற்கேற்ப சில அம்சங்கள் இந்த புதிய கவாஸாகி பைக்கில் தவிர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications









