டிவிஎஸ் எக்ஸ்.எல்-க்கு டஃப் கொடுக்கும்... விலையை பார்த்தால் உடனே புக் பண்ண தோணுது!
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி & பவர் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (Kinetic Green Energy and Power Solutions Limited), 'இ லூனா பிரைம்' (E Luna Prime) என்ற புதிய எலக்ட்ரிக் மொபெட் (Electric Moped) வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பரந்த போக்குவரத்துத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வாகனம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மலிவான, அதே சமயம் நவீன மற்றும் நம்பகமான தனிநபர் போக்குவரத்தை தேடும் கோடிக்கணக்கான மக்களின் தேவைகளை இது பூர்த்தி செய்கிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற சூழல்களுக்கு ஏற்ற வகையில், புதிய எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கைனெட்டிக் இ-லூனா எலக்ட்ரிக் மொபெட்டின் விலை குறைவான வெர்சனாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இ-லூனா, 25,000 யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் ஏழை, எளிய மக்களுக்கான இ-லூனா பிரைம் மூலம் கைனெட்டிக் க்ரீன் களமிறங்கியுள்ளது.
இந்தியாவின் எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கருவியாக இ-லூனா பிரைம் செயல்பட உள்ளது. சுமார் 75 கோடி இந்தியர்கள், அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 50% பேர் இன்னும் இருசக்கர வாகனம் வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எளிதாக தனிநபர் போக்குவரத்து வசதியை வழங்குவதே இதன் நோக்கம் என கைனெட்டிக் க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ-லூனா பிரைம், வலிமையான 16-இன்ச் அலாய் சக்கரங்களைக் கொண்டுள்ளது. இது மேடு பள்ளமான மற்றும் சவாலான சாலைகளில் சிறப்பான ஸ்திரத்தன்மையையும், நிலைத்தன்மையையும் வழங்குகிறது. வழக்கமான மோட்டார்சைக்கிள்களில் இல்லாத, பொருட்களை ஏற்றிச் செல்ல ஒரு விசாலமான முன் பகுதி இதில் உள்ளது.
புதிய இ-லூனா பிரைம் ஆனது இ-லூனா மொபெட்டின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், சௌகரியமான சிங்கிள் சீட், ஸ்டைலான டிஜிட்டல் வண்ண இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பயனுள்ள முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, நவீன பாடி டீக்கால்கள், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட சைடு கிளாடிங் மற்றும் நம்பகமான டியூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதில் உள்ளன.

சந்தையில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட இ-லூனா தளத்துடன் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இ-லூனா பிரைம் 110 கிமீ மற்றும் 140 கிமீ என இரு விதமான ரேஞ்ச் (Range) ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.82,490-இல் இருந்து துவங்குகின்றன. 6 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் இ-லூனா பிரைம், உங்கள் அருகிலுள்ள கைனெட்டிக் க்ரீன் டீலர்ஷிப்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இ-லூனா பிரைம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவின் மாறிவரும் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிலையான, நீடித்த மற்றும் குறைந்த செலவில் தினசரி பயண தீர்வை வழங்குகிறது. பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு இது இணக்கமாக உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் 100சிசி மற்றும் 110சிசி பெட்ரோல் (Petrol) மோட்டார்சைக்கிள்களுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள ஒரு செலவு குறைந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஆகும். பொதுவாக, வழக்கமான பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கானச் செலவு மாதத்திற்கு ரூ.7,500 என மதிப்பிடுகிறது. இதில் ரூ.2,200 (மாதத்தவணை) மற்றும் ரூ.5,300 (எரிபொருள் செலவுகள் மற்றும் பராமரிப்பு) ஆகியவை அடங்கும்.
அதுவே, இ-லூனா பிரைம் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 10 பைசா என்ற மிகக் குறைந்த இயக்கச் செலவு மற்றும் மாதத்திற்கு சுமார் ₹2,500 (இஎம்ஐ மற்றும் இயக்கச் செலவு) என்ற மொத்த உரிமைச் செலவுடன் நிகரற்ற மலிவு விலையை வழங்குகிறது. இதன் மூலம், நுகர்வோர் நீண்ட கால போக்குவரத்து செலவுகளில் ஆண்டுக்கு ரூ.60,000 வரை சேமிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான அறிமுக நிகழ்வில், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய இ-லூனா பிரைம் ஆனது மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சிறந்த சௌகரியத்துடன் மேம்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









