கேடிஎம் பைக் வாங்கும்போது இந்த இலவச பரிசை கேட்டு வாங்குங்க! 2 லட்ச ரூபாய் பைக்குக்கு இதுகூட கொடுக்கலனா எப்படி?
கேடிஎம் (KTM), ஆஸ்திரியாவை சேர்ந்த உலகின் முன்னணி பைக் நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் கேடிஎம் அறிமுகம் செய்த முதல் பைக் 200 ட்யூக்' (200 Duke) ஆகும். அதன்பின் பல்வேறு கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், முதல் பைக்கான 200 ட்யூக் எப்போதுமே கேடிஎம் நிறுவனத்திற்கு ஸ்பெஷல் ஆகும். இதனாலேயே, அவ்வப்போது மறக்காமல் 200 ட்யூக் பைக்கை கேடிஎம் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது.
அதேபோல், 200 ட்யூக் பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக அவ்வப்போது சலுகைகள் மற்றும் பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது, 200 ட்யூக் பைக்கை வாங்கும் கஸ்டமர்களுக்கு இலவசமாக ரைடிங் ஜாக்கெட் (Riding Jacket) வழங்கப்படும் என கேடிஎம் அறிவித்துள்ளது.

இதற்காக ரைனாக்ஸ் (Rynox) என்கிற நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ள கேடிஎம் நிறுவனம், ரைனாக்ஸ் நிறுவனத்தின் சைபெர் ஜிடி (Cypher GT) என்கிற ரைடிங் ஜாக்கெட்டை 200 ட்யூக் பைக்கை வாங்குபவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. பைக் ஓட்டும்போது இந்த ஜாக்கெட்டை அணியலாம். பைக்கில் பாதுகாப்பான பயணத்திற்கு ரைடிங் ஜாக்கெட் அவசியமான ஒன்றாகும்.
கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2.06 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட்கள் உடன் உருவாக்கப்படும் 200 ட்யூக் பைக்கில் ஹேண்டில்பாரில் 5-இன்ச்சில் ஸ்க்ரீன் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக தேவையான அனைத்து முக்கிய விபரங்களையும் ரைடர் எளிதாகவும், விரைவாகவும் அறிந்துக் கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடிய இந்த திரையின் வாயிலாக மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் இசையை கேட்பது மட்டுமின்றி, பயணத்திற்கான வழிக்காட்டுதல்களையும் பெறலாம். இதற்கு நீங்கள் கேடிஎம் மை-ரைடு மொபைல் செயலி (KTM My-Ride Mobile App) உடன் பைக்கை இணைத்திருக்க வேண்டும். இந்த டிஸ்பிளேவை கண்ட்ரோல் செய்வதற்கான 4 பொத்தான்கள் ஹேண்டில் கைப்பிடிகளுக்கு அருகே வழங்கப்பட்டுள்ளன.
இந்த டிஸ்பிளேவை 3ஆம் தலைமுறை 390 ட்யூக் பைக்கில் இருந்து சமீபத்தில்தான் 200 ட்யூக் பைக்கிற்கு கேடிஎம் நிறுவனம் வழங்கியது. 200 ட்யூக் பைக்கில் 199.5சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 24.68 பிஎச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-இல் 19.3 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
கேடிஎம் 250 ட்யூக் மற்றும் 390 ட்யூக் பைக்குகளை போன்று பிளவுப்பட்ட டிரெல்லிஸ் ட்யூப்லர் ஃப்ரேமில் உருவாக்கப்படும் கேடிஎம் 200 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 10 விதமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷன் செட்-அப்கள் அனைத்து டபிள்யூ.பி அபெக்ஸ் (WP Apex) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.
200 ட்யூக்கில் முன் சக்கரத்தில் 300மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 230மிமீ டிஸ்க்கும் வழங்கப்படுகின்றன. இந்த பிரேக் செட்-அப்பில் வழங்கப்பட்டுள்ள காலிபர்கள் பைப்ரே (Bybre) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றுடன், பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் அல்லது சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் எனப்படும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் இந்த பைக்கை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே 200சிசி என்ஜின் உடன் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பைக் கேடிஎம் 200 ட்யூக் ஆகும். அதிக விலையை சரிச்செய்யும் விதமாக இந்த பைக்கில் முடிந்தவரையில் எல்லாவற்றையும் பிரீமியம் தரத்தில் வழங்க கேடிஎம் முயற்சிக்கிறது. இருப்பினும் போதாக்குறைக்கு, இலவசமாக ரைடிங் ஜாக்கெட்டையும் வழங்க ஆரம்பித்துள்ளது. இது எந்த அளவிற்கு கைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








