புது பைக் மூலம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கேடிஎம்! ஆனா விலையை பார்த்த பிறகு ஆசையே போய்டும்!
கேடிஎம் (KTM), ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். 2012ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவில் கேடிஎம் நுழைந்தது. தற்சமயம் 125சிசி என்ஜின் உடனும் கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் முதலாவதாக அறிமுகம் செய்த பைக், ட்யூக் 200 என்கிற 200சிசி பைக் ஆகும்.
ஏனெனில், கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் தன்னை விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனமாகவே அறிமுகம் செய்துக் கொள்ள விரும்பியது. அதன்பின்பும் விலையுயர்ந்த பைக்குகளை தான் இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்தது. இருப்பினும், அதற்கிடையில் குறைந்த விலையில் கேடிஎம் பைக் வாங்க விரும்புபவர்களுக்காக கேடிஎம் ட்யூக் 125 மற்றும் ஆர்சி125 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சமீபத்தில் ட்யூக் 125 பைக்கின் விற்பனையை இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் நிறுத்தியது. இதனால் மேம்படுத்தப்பட்ட புதிய ட்யூக் 125 பைக் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என நாம் எதிர்பார்த்து வந்த நிலையில், ட்யூக் 125 பைக்கிற்கு பதிலாக முற்றிலும் புதுமையான '160 ட்யூக்' (160 Duke) பைக் அறிமுகம் செய்யப்படலாம் என சில வாரங்களுக்கு முன் கேடிஎம் நிறுவனம் தெரிவித்தது.
மேலும், புதிய 160 ட்யூக் பைக் தொடர்பான டீசர் (Teaser) வீடியோக்களையும் வெளியிட்டு மார்க்கெட்டில் கேடிஎம் நிறுவனம் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது புதிய விலை குறைவான பைக்கை தற்போது கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்து இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை அதிர வைத்துள்ளது.

புதிய கேடிஎம் 160 ட்யூக் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 998 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த ட்யூக் 125 பைக்கை காட்டிலும் அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய 160 ட்யூக் பைக் நாம் எதிர்பார்த்ததை போலவே, நிறைய டிசைன் அம்சங்களையும், பாகங்களையும் ட்யூக் 200 பைக்கில் இருந்து பெற்றுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், மார்க்கெட்டில் பிரபலமான கேடிஎம் ஆர்சி200 பைக்கின் சில டிசைன் ஹைலைட்களை கூட புதிய 160 ட்யூக் பைக்கில் காண முடிகிறது. யமஹாவின் எம்டி-15 (MT-15) பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக 160 ட்யூக் பைக்கை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கி உள்ளது. புதிய கேடிஎம் 160 ட்யூக் பைக்கில் 164.2சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்தவொரு கேடிஎம் பைக்கிலும் பொருத்தப்படாத இந்த முற்றிலும் புதிய என்ஜின் அதிகப்பட்சமாக 9,500 ஆர்பிஎம்-இல் 19 பிஎஸ் மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 15.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் இணைக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு கிடைத்த வரவேற்பு கூட ட்யூக் 125 பைக்கிற்கு கிடைக்கவில்லை என்பதினால்தான் அதன் விற்பனையை கேடிஎம் நிறுவனம் நிறுத்தியது. அதற்கு மாற்றாக தற்போது 160 ட்யூக் பைக் கொண்டுவரப்பட்டு உள்ளதால், இதன் பிறகாவது லோயர் மிடில்-கிளாஸ் (Lower Middle-Class) மக்கள் மத்தியிலும் கேடிஎம் பைக்குகள் அதிக கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









